தீபாவளி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 17ம் தேதி பிரதீப் ரங்கநாதனின் Dude, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்த பைசன், ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் ஆகிய மூன்று படங்களும் வெளியானது.இதில் துவக்கம் முதலே டியூட் படம் அதிக வசூலை பெற்று வந்தது. ஏனெனில் 2கே கிட்ஸ்களை கவரும்படியான கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் இப்படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். அதோடு இளசுகளின் கனவு கன்னியான மம்தா பைஜும் இந்த படத்தில் இருந்து பெரிய பிளஸாக இருந்தது.
ஒருபக்கம் வழக்கம் போல் மாரி செல்வராஜின் சீரியஸ் சினிமாவாக பைசன் உருவாகி இருந்தது. தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பைசனை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. அதேநேரம் இப்படம் டியூட் அளவுக்கு வசூலை பெறவில்லை. பைசன் திரைப்படம் ஒரு வாரத்தில் 40 கோடி வசூல் செய்த நிலையில் டியூட் படமோ 100 கோடியை தாண்டியது.

டியூட் படத்தை தயாரித்த மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படம் 100 கோடி வசூலைத் தொட்டு விட்டதாக கடந்த 23ஆம் தேதி அறிவித்தது. அதுவரை தினமும் அப்படத்தின் வசூல் நிலவரத்தை அந்நிறுவனம் சொல்லி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வசூலை பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏனெனில், கடந்த மூன்று நாட்களாகவே படத்தின் வசூல் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் பைசன் படத்திற்கு வசூல் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெரும்பாலானோர் பயன்படுத்தும் BookMyshow இணையதளத்தில் தற்போது பைசன் படத்திற்கு அதிக டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் பைசனுக்கு வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பி,சி சென்டர்களில் பைசனுக்கு நல்ல வசூல் இருக்கிறது.

தமிழில் வெளியான அதே நாளில் டூயட் படம் தெலுங்கிலும் வெளியானது. எனவே அங்கும் நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் பைசன் நேற்றுதான் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. எனவே பைசனின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. இரண்டாவது வாரத்தில் டியூட் படத்துக்கு வசூல் குறைந்துவிட்ட நிலையில் பைசனுக்கு வசூல் அதிகரித்துள்ளது. துருவுக்கு முதல் ஹிட் படமாக பைசன் அமைந்திருக்கிறது.