பீட்சா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பாராஜ். இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு நிறைய குறும்படங்களை இயக்கினார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளில் கூட இவரின் குரும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா திரைப்படம் ஹிட் அடிக்கவே கார்த்திக் சுப்புராஜுக்கு தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர் இயக்கிய இரண்டாவது படமான ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜை ஒரு முக்கிய இயக்குனராக மாற்றியது. சித்தார்த், பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஜிகர்தண்டா படம் நல்ல வசூலை பெற்றது.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களையும் இயக்கினார் கார்த்திக் சுப்பராஜ். கடைசியாக சூர்யாவை வைத்து இயக்கிய ரெட்ரோ படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது.கார்த்திக் சுப்பராஜ் அடிப்படையில் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினி பற்றி எப்போது எங்கு பேசினாலும் ‘தலைவர்’ என்றுதான் குறிப்பிடுவார். ரஜினியை வைத்து திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்பதுதான் இவரின் லட்சியமாக இருந்தது.
ஜிகர்தண்டா படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரஜினி கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். அப்படி அவர் இயக்கிய படம்தான் பேட்ட. கடந்த 10 வருடங்களில் வெளியான ரஜினி படங்களில் பேட்ட எவ்வளவோ பரவாயில்லை என சொல்லுமளவுக்கு படத்தை நன்றாகவே எடுத்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படம் நல்ல வசூலையும் பெற்றது. அதன்பின் மீண்டும் ரஜினியை வைத்து படமெடுக்க கார்த்திக் சுப்பாராஜ் பலமுறை முயன்றும் ரஜினி பிடி கொடுக்கவில்லை.
நிறைய கதைகளை அவர் சொல்லியும் ரஜினிக்கு திருப்தி ஏற்படவில்லை. தற்போது ஜெயிலர் 2, அடுத்து சுந்தர் சி படம், அடுத்து மீண்டும் நெல்சனுடன் ஒரு படம் என ரஜினிக்கு தொடர் லைன் அப் இருப்பதால் இதற்கு மேல் காத்திருக்க வேண்டாம் என நினைத்த கார்த்திக் சுப்பாராஜ் ரஜினிக்கு சொன்ன ஒரு கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
.