சத்தீஷ்கார், மராட்டிய, ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகள் இன்னும் தங்களது அடிப்படை வலையமைப்பை வைத்திருக்கும் நிலையில், அவற்றை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலைட், மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்ராஜ்ஹர் மாவட்டத்தின் அடர்ந்த சலஹடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட் குழுவினர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அதிகாலை அந்தப் பகுதியில் முழுமையான சோதனை நடவடிக்கையை தொடங்கினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.உடனே பாதுகாப்புப்படையினர் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்த, கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
அதில் மாவோயிஸ்ட் தளபதி ஹிம்ப்ராம் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடலில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் பிரச்சார ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இந்த விசாரணையில், ஹிம்ப்ராம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அண்மையில் (அக்டோபர் 23) கோல்ராஜ்ஹர்.
சலஹடி ரெயில் பாதையில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.இந்த வெற்றிகரமான நடவடிக்கையால், அசாம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் வலையமைப்புக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.