கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில், 476 கிராமை, கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டுள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா, சபரிமலைக்கு கிலோ கணக்கில் தங்கத்தை தானமாக வழங்கியிருந்தார். அதைக்கொண்டு கருவறையின் மேற்கூரை, பிரதான கதவுகள், கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க தகடு வேயப்பட்டது.
பராமரிப்பு பணிகளுக்காக துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க தகடுகள் கழற்றப்பட்டு, மீண்டும் பொருத்திய போது, 04 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

அதன்படி, விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்ற, பெங்களூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது திருடிய தங்கத்தில் ஒரு பகுதியை, கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகைக்கடை வியாபாரி கோவர்தன் என்பவரிடம் விற்றதாக உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் பல்லாரி சென்றனர்.
அங்கு கோவர்தன் வசம் இருந்து சபரிமலை துவாரபாலகர்கள் சிலை தங்கம், 476 கிராமை மீட்ட்டுள்ளனர்.அதன் பின்னர், உன்னிகிருஷ்ணனை பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து தங்க கட்டிகள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சபரிமலை துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில், செப்பனிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர், கடந்த, 12-ஆம் தேதி சென்னை வந்து அம்பத்துார், 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தி, சம்மன் கொடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், எஸ்.பி., சசீதரன் தலைமையில், 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று மாலை மீண்டும், 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அப்போது தங்கம் திருடிய புகாரில் சிக்கிய உன்னிகிருஷ்ணன் போத்தியையும், அவருடன், பங்கஜ் பண்டாரி என்ற தொழிலதிபரும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பல மணி நேரமாக நீடித்த விசாரணையில், செப்பனிடும் பணியின் போது இடம் பெற்ற ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.