மனைவி செய்த செயல்... ஆத்திரத்தில் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை!
Seithipunal Tamil October 26, 2025 11:48 AM

மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. ராகுல் சவான் என்ற நபர் தனது மனைவியுடன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். குழந்தைகளுக்கு வயது இரண்டு மட்டுமே.

சம்பவம் நடந்த நாள், ராகுல் சவான் குடும்பத்துடன் வேறு இடத்திற்குப் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது அவருக்கும் மனைவிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது. கோபத்தில் மனைவி வாகனத்திலிருந்து இறங்கி தன் தாயின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் மனஅழுத்தத்திற்குள்ளான ராகுல் சவான், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தனது இரட்டை பெண் குழந்தைகளையும் காட்டுப் பகுதியில் அழைத்து சென்று, ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்.

பின்னர் நேராக வாஷிம் காவல் நிலையம் சென்று, தானே தனது குழந்தைகளை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.

செய்தியை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனே சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இரண்டு சிறுமிகளின் உடல்கள் சில பகுதிகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. சாட்சியங்களை அழிக்க ராகுல் சவான் உடலுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே குழந்தைகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தந்தையே சொந்த குழந்தைகளை இவ்வாறு கொலை செய்திருப்பது உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை குழந்தைகளின் மரணத்தால் கிராமமே துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில், ராகுல் சவானுக்கு எதிராக போலீசார் கொலைக்குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.