ரூ.8,000 வந்த மின்கட்டணம்... தற்கொலைக்கு முயன்ற திமுக நிர்வாகியால் பெரும் பரபரப்பு!
Seithipunal Tamil October 26, 2025 11:48 AM

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த திமுக 4வது வார்டு கிளைச் செயலாளர் சபரி ராஜன், மின்சார கட்டண பிரச்சனைக்காக மின்வாரிய அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டீக்கடை நடத்தி வரும் சபரி ராஜன் தனது வீட்டின் கீழ்தளத்தில் வசிக்க, அவரது மகள் மேல் தளத்தில் தனியாக வாழ்ந்து வந்தார். இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இரு இணைப்புகளையும் ஒன்றாக இணைத்தனர். இதனால் வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை இருந்த மின் கட்டணம் இம்மாதம் ரூ.8,000 என அதிகரித்தது.

மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையிலும் இத்தகைய உயர்ந்த கட்டணம் வருவது குறித்து சபரி ராஜன் ஆன்லைன் வழியாக புகார் அளித்து, இரு தனி இணைப்புகளாக மீண்டும் பிரிக்க கோரிக்கை வைத்தார். அதிகாரிகள் ஆய்வு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, தன்னால் டீக்கடை வருமானத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் கட்டணம் செலுத்த இயலாது எனக் கூறி, சபரி ராஜன் தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தின் போது அதிகாரிகள் “மின்கட்டணம் கட்டாமல் விட முடியாது, எங்களால் எதுவும் செய்ய இயலாது” என்று கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அந்தநேரம் விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் அவரை தடுத்து, மண்ணெண்ணை கேனை பறித்து தண்ணீர் ஊற்றி ஆபத்தை தவிர்த்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.