Getty Images
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. நேற்று சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
தொடரை இழந்திருந்திருந்தாலும், வெற்றியோடு முடித்ததில் இந்திய அணி திருப்தியடைந்திருக்கிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் இந்த இந்திய அணி மீது பல்வேறு கேள்விகள் இருந்தன. அவை அனைத்துக்கும் பதில் கிடைத்திருக்கிறதா?
மீண்டும் ரன் குவித்த ரோஹித் & கோலிஇந்தத் தொடர் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட முக்கியக் காரணம் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கியது. 5 மாதங்கள் எவ்வித கிரிக்கெட்டும் ஆடாத இவர்கள் மீண்டும் களமிறங்கிய நிலையில், அவர்கள் ஃபார்ம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது.
அந்த சந்தேகங்களுக்கு ஏற்றதுபோல் முதல் போட்டியில் இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பெர்த்தில் நடந்த அந்தப் போட்டியில் ரோஹித் 8 ரன்களிலும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். விராட் கோலியோ அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆனார். அந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா அரைசதம் கடந்தார்.
Getty Images மூன்றாவது போட்டியில் ரோஹித் சதமும், கோலி அரைசதமும் அடித்தனர்
மூன்றாவது போட்டியில் இருவருமே மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோஹித் சதமும், கோலி அரைசதமும் அடித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவை வெற்றி பெறவும் வைத்தார்கள். இந்தப் போட்டியில் ரோஹித் அடித்த சதம், சர்வதேச போட்டிகளில் அவரது 50வது அரைசதமாக அமைந்தது.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இருவருமே இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து (168 ரன் பார்ட்னர்ஷிப்) இந்த ரன்களை அடித்தார்கள். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இருவரும் இணைந்து 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆஸ்திரேலிய மன்ணில் இவர்கள் இருவரும் ஆடும் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் என்று கருதப்பட்டிருந்த நிலையில், அப்படியொரு போட்டியில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்தப் போட்டி முடிந்ததும் பேசிய ரோஹித் ஷர்மா, "நான் எப்போதுமே இங்கு வந்து விளையாடுவதை விரும்பியிருக்கிறேன். 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக வந்தபோது கிடைத்த சிறந்த அனுபவங்கள் அவ்வப்போது வந்து போகின்றன. மீண்டும் இங்கு வருவோமா என்று தெரியவில்லை. ஆனால், இங்கு விளையாடிய ஒவ்வொரு அனுபவமுமே அலாதியானது. நிறைய நல்ல நினைவுகள், மோசமான நினைவுகளும் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், இங்கு விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியோடு எடுத்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
Getty Images தன் 50வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா
இந்த உணர்வுகளுக்கு மத்தியில் டெக்னிக்கலாகவும் இருவரின் செயல்பாடும் ரசிகர்களுக்கும் வல்லுநர்களுக்கும் ஊக்கம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. முதலிரு போட்டிகளிலும் இருவரிடமுமே உறுதியான ஆட்டம் வெளிப்பட்டிருக்கவில்லை. அடிலெய்டில் அரைசதம் அடித்திருந்தாலும் ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சிரமப்படவே செய்தார். ஆனால் சிட்னியில் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே முழுமையான நம்பிக்கையுடன் விளையாடினார்கள்.
ரோஹித் ஆட்டத்தில் நேற்று எவ்வித தடுமாற்றமும் தெரியவில்லை. முதலிரு போட்டிகளில் ரன் எடுக்கவே தடுமாறிய கோலி, முதல் பந்திலேயே ரன் எடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே அதைக் கொண்டாடவும் செய்தார். இரு மோசமான ஆட்டங்களை முழுமையாக மறந்துவிட்டு இருவரும் ஆடவந்தது போல் இருந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய விராட், "இத்தனை ஆண்டுகள் ஆடியும், இத்தனை ரன்கள் அடித்தும் அந்த ஒரு ரன்னுக்காக கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இந்த நிலையிலும் இந்த விளையாட்டு இன்னும் கற்றுக்கொடுக்கிறது. எனக்கு எப்போதுமே ஒரு சூழ்நிலை கொடுக்கப்படும்போது, அது என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது" என்று கூறினார்.
முதலிரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்யும்போது தடுமாறிய அவர், சேஸிங் என்று வந்ததும் தன் சிறந்த செயல்பாட்டைக் காட்டிவிட்டார். சிட்னி போட்டியில் அரைசதம் கடந்த கோலி, ரன் சேஸ்களில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்தவர் பட்டியலில் சச்சினை முந்தி முதலிடம் பிடித்தார். ரன் சேஸ்களில் இதுவரை 70 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்திருக்கிறார் விராட்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்காராவை முந்தினார் கோலி. இப்போது 14255 ரன்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
Getty Images ஆஸ்திரேலியாவில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிவிட்டாரா கோலி?
பெரும் கேள்விகளுக்கு இடையே களமிறங்கிய இருவரும் பல்வேறு சாதனைகள் படைத்து இந்தத் தொடரை முடித்திருக்கிறார்கள். ரோஹித் தொடர் நாயகனும் ஆகியிருக்கிறார்!
முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு பிபிசி தமிழிடம் பேசியிருந்த சிஎஸ்கே முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், "கோலி, ரோஹித் ஆகியோரின் செயல்பாட்டை ஒரு போட்டியில் நான் முடிவு செய்துவிடமாட்டேன். அவர்கள் ஜாம்பவான்கள். உடனடியாக கம்பேக் கொடுத்துவிடுவார்கள். தொடர் முடிந்த பின்னரே அவர்கள் செயல்பாட்டை நான் ஆராய்வேன்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னதுபோலத்தான் நடந்திருகிறது. இப்போது பார்க்கும்போது, அவர்கள் ஃபார்ம் பற்றியோ, ஃபிட்னஸ் பற்றியோ இப்போது நிச்சயம் கேள்விகள் எழுப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஹர்ஷித் ராணா அசத்தல்இந்தத் தொடருக்கு முன் கேள்வியாக இல்லாமல் விமர்சனமாகவே எழுப்பப்பட்ட ஒரு விஷயம் ஹர்ஷித் ராணாவை அணியில் எடுத்தது. முகமது ஷமி போன்ற சீனியர் புறக்கணிக்கப்பட்டு இவர் சேர்க்கப்பட, கம்பீரின் தயவால் தான் அணியில் இருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தன் செயல்பாட்டின் மூலம் அதற்கு ஓரளவு பதிலளித்திருக்கிறார் ஹர்ஷித் ராணா.
முதல் போட்டியில் ஹர்ஷித் ராணாவால் கட்டுக்கோப்பாக பந்துவீச முடியவில்லை. 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்த அவரால் விக்கெட் ஏதும் எடுக்க முடியவில்லை. அடிலெய்டில் ஒருசில நல்ல பந்துகளை வீசினாலும், சீரான செயல்பாடு இல்லாததால் மறுபடியும் அவர் ஓவர்களில் ரன்கள் அதிகமாக சென்றது. 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் 7.37 என்ற எகானமியில் ரன்கள் விட்டுக்கொடுத்தார் அவர்.
Getty Images இந்தத் தொடரில் ஹர்ஷித் ராணா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்
ஆனால் சிட்னியில் சிறப்பாக செயல்பட்டார் ஹர்ஷித். விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல் சிக்கனமாகவும் பந்துவீசினார். 4.50 என்ற எகானமியில் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் அள்ளினார் அவர். இதன்மூலம் இந்தத் தொடரின் டாப் விக்கெட் டேக்கராகவும் (6 விக்கெட்டுகள்) மாறினார்.
மூன்றாவது போட்டிக்கு முன் நம்மிடம் பேசியிருந்த கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ, "ஹர்ஷித் ராணாவை இந்திய அணி 2027 உலகக் கோப்பைக்காக தயார் படுத்துகிறது. பௌன்ஸ் நிறைந்த ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவரால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அவரும் அவ்வப்போது தன் பந்துவீச்சில் அதை வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் பந்துவீசினால் அவரால் நல்ல செயல்பாட்டைக் கொடுக்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்த மூன்றாவது போட்டியில் அவர் செயல்பட்ட விதம் அதை நன்கு உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக மிட்செல் ஓவன் விக்கெட்டை அவர் வீழ்த்திய பந்து அதற்கு நல்ல உதாரணம். 'ஹார்ட் லென்த்' பகுதியில் மணிக்கு சுமார் 142 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டலாக அந்தப் பந்தை வீசியிருந்தார் அவர். இந்திய அணி அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பது அதைத்தான்.
அதுமட்டுமல்லாமல் அடிலெய்டில் அவர் அடித்த 24* ரன்களையும் மறந்துவிடக்கூடாது!
வாஷிங்டன் & அக்ஷர் சுழல் கூட்டணியின் செயல்பாடுஇந்தத் தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்த இன்னொரு விஷயம் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரின் செயல்பாடு.
பந்துவீச்சில் இருவரின் செயல்பாடும் நன்றாக இருந்தது. மிடில் ஓவர்களில் ரன் விகிதத்தைக் கட்டுப்படுத்துவது, பார்ட்னர்ஷிப்கள் உடைப்பது என இருவரும் இணைந்து நன்றாக செயல்பட்டார்கள். 19 என்ற சராசரியில் இந்தத் தொடரில் 5 விக்கெட்டுகள் (எகானமி - 5) வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
Getty Images இந்தத் தொடரில் சிக்கனமாகப் பந்துவீசியதோடு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்
அதேபோல் சிக்கனமாகப் பந்துவீசிய அக்ஷர் 4.45 என்ற எகானமியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 3 போட்டிகளிலுமே முக்கியமான நேரங்களில் பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார் அக்ஷர்.
பந்துவீச்சைப் போல் பேட்டிங்கிலும் நல்ல செயல்பாடுகளைக் கொடுத்தார் அக்ஷர் பட்டேல். முதல் போட்டியில் இக்கட்டான நேரத்தில் 31 ரன்கள் எடுத்தவர், இரண்டாவது போட்டியிலும் 44 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் இடத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு நியாயம் செய்யும் வகையில் இருந்தது அவரது செயல்பாடு.
மூன்றாவது போட்டியில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை அக்ஷர் வீழ்த்தியதும் தனது எக்ஸ் பக்கத்தில் அக்ஷரைப் பாராட்டி பதிவிட்டார் இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான். அதில், "பெரிய மீனை அக்ஷர் பிடித்திருக்கிறார். அவரது பௌலிங் வேரியேஷன்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சீராக அவர் 5 எகானமிக்கும் கீழ் பந்துவீச வைத்திருக்கிறது. அவரது சிறந்த பேட்டிங்கையும் சேர்த்துப் பார்த்தால், இந்திய அணிக்கு ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக அவர் மாறிவருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Getty Images பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார் அக்ஷர் பட்டேல்
வாஷிங்டன் பேட்டிங்கில் பெரியளதவில் தாக்கம் ஏற்படுத்தவில்லையென்றாலும், அதற்கான திறன் இருப்பதால் நிச்சயம் அணி நிர்வாகம் அதில் நம்பிக்கை கொள்கிறது. இவர்கள் இருவருமே நீண்ட காலம் இணைந்து நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தத் தொடரில் கொடுத்திருக்கிறார்கள்.
பதில் கிடைக்காத கேள்விகள்இந்தத் தொடரில் இந்தியாவுக்கு சில சாதகமான அம்சங்கள் அமைந்திருந்தாலும், ஒருசில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் தான் இருக்கிறது. அதில் முக்கியமானது அணியின் காம்பினேஷன். 8 பேட்டிங் ஆப்ஷன்களோடு சமீபமாக களமிறங்கிக் கொண்டிருப்பதால் குல்தீப் போன்ற வீரரை இந்திய அணி வெளியே அமரவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முதலிரு போட்டிகளிலும் அப்படிச் செய்தபோது இந்தியா தோல்வியடைய, மூன்றாவது போட்டியில் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இந்தப் போட்டியில் ஒரு பேட்டிங் ஆப்ஷன் குறைவாகத்தான் இந்திய அணி களமிறங்கியது. ஆக, மாற்றங்கள் செய்யும்போது ஆல்ரவுண்டர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த அணியின் காம்பினேஷனை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது அணிக்குப் பின்னடைவாகவே அமைகிறது. அதற்கு விரைவில் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
Getty Images கேப்டனாக முதல் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறார் சுப்மன் கில்
இந்தத் தொடரில் கவலையளித்த இன்னொரு விஷயம், கடைசிப் போட்டியில் காயம் காரணமாக நித்திஷ் ரெட்டி ஆடாதது. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் மிகவும் அவசியம் என்பதால் அவர் மீது இந்திய நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால், அவரும் ஹர்திக் பாண்டியா போல் தொடர்ச்சியாக காயத்தால் அவதிப்படுவது மேலும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களின் ஃபிட்னஸ் விஷயத்தில் கூடிய விரைவில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.
கோலி, ரோஹித் வருகைக்கு நிகரான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இன்னொரு விஷயம், ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லின் அறிமுகம். முதல் தொடரை அவர் இழந்திருக்கிறார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் சற்று தடுமாறினார். அதேசமயம் தோல்வியிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார். அதனால் சில சாதகங்களும் இருக்கின்றன, பாதகங்களும் இருக்கின்றன.
எந்தவொரு வீரரையும், கேப்டனையும் முதல் தொடரிலேயே கணித்துவிட முடியாது. அதனால் கில்லின் செயல்பாடு எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு