நாட்டின் 15-வது துணை ஜனாதிபதி தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுள்ளார். இவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைக்க பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன், நான்கு நாள் பயணமாக நாளை மறுதினம் தமிழகம் வரவுள்ளார். அப்போது அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. இந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டமைக்கு காரணம் குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சென்னை மக்கள் அமைப்பு சார்பில், வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அழைக்க முடிவு செய்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினை அழைத்தால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி வரமாட்டார் எனவும், இதனால், மு.க.ஸ்டாலினை அழைக்க வேண்டாம் என, பா.ஜ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், 'சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி அல்ல; அவர் துணை ஜனாதிபதி. எனவே, முதல்வர் ஸ்டாலினை அழைப்பதில் தவறிவில்லை' என, விழா ஏற்பாட்டாளர்கள் வாதிட்டுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினை அழைக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளதால், குறித்த பாராட்டுவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வரும், 28-ஆம் தேதி கோவை செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர், அங்கு பேரூர் மடத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளதோடு, 29-ஆம் தேதி திருப்பூர் சென்று, தன் தாயை சந்தித்து ஆசி பெறவுள்ள நிலையில் அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. பின்னர் வரும் 30-ஆம் தேதி மதுரை செல்லும் அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேறவுள்ளதாக தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.