கரூர் சம்பவத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என்ன உள்ளது? வெளியான தகவல்!
Seithipunal Tamil October 27, 2025 12:48 AM

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உண்மை நிலையை வெளிச்சமிடுவதற்காக விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட சி.பி.ஐ. குழு கடந்த 17ஆம் தேதி கரூருக்கு வந்து விசாரணை ஆரம்பித்தது. அப்போது, முன்பு விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சி.பி.ஐ.க்கு ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக தனித்தனியாக சாட்சிகளை விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, அது கரூர் நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், த.வெ.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, த.வெ.க. வக்கீல்கள் சார்பில் அந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த FIR நகலை வழங்க உத்தரவிட்டார்.

சி.பி.ஐ. அதிகாரிகள், “கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் புதிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.