இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. சில நாட்களாக சிறிய சரிவு இருந்தாலும், மொத்தத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏறியுள்ளது. இதற்குப் பிரதானக் காரணம் — உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை பெரிய அளவில் வாங்கிக் குவிப்பதே!
ஆனால் கேள்வி என்னவென்றால் — எல்லா நாடுகளும் ஒரே நேரத்தில் தங்கத்தை வாங்கத் தொடங்கியது ஏன்?
பொருளாதார வல்லுநர்கள் இதை “structural volatility” என்கிற பெயரில் விளக்குகிறார்கள். அதாவது, உலக பொருளாதாரத்தில் நிலைமைகள் மிகவும் அசாதாரணமாக மாறி வருகின்றன. வளர்ச்சி வீதம் 2%க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்தும் பணவீக்கம் குறையவில்லை. இதுபோன்ற குழப்பமான சூழலில் கடன் பத்திரங்கள் அல்லது டாலர் முதலீடுகள் நிலையான வருமானம் தரவில்லை.
இத்தகைய நிலையில் நாடுகள் நம்பும் ஒரே பாதுகாப்பான வழி — தங்கம்!
தங்கம் எந்த நாட்டின் கரன்சியையும் சார்ந்தது அல்ல. அது பணவீக்கம், பொருளாதார தடைகள், அல்லது அரசியல் மாறுபாடுகளால் பாதிக்கப்படாது. இதனால் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் தங்கத்தின் பங்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இன்ஃபார்மெரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் ஷர்மா கூறுகையில்,“மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது பாதுகாப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்காக. டாலரின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக தங்கம் ஒரு நம்பிக்கைக்குரிய புகலிடம்,” என்று தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா, ரஷ்யா, துருக்கி, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகளில் முன்னணியில் உள்ளன.
உலக தங்கக் கவுன்சில் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் —இந்தாண்டில் மட்டும் சுமார் 900 டன் தங்கத்தை உலக மத்திய வங்கிகள் வாங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 76% வங்கிகள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் முதலீட்டை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.73% வங்கிகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும் என்று நம்புகின்றன.
இதற்குக் காரணம் உக்ரைன் போரின் பின்னணியில் ஏற்பட்ட ரஷ்யா அனுபவம். ரஷ்யா வைத்திருந்த டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்கியது. இதனால் பல நாடுகள், “நாளை நமக்கும் இதே நிலை ஏற்பட்டால்?” என்ற அச்சத்தில், டாலர் கையிருப்பை குறைத்து தங்கத்தை வாங்கத் தொடங்கின.
தங்கம் வங்கி அமைப்புக்கு வெளியே பாதுகாப்பாக சேமிக்க முடியும். எந்த நாட்டின் அனுமதியோ அல்லது கட்டுப்பாடோ தேவையில்லை. இதனால் உலக நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றன.
இதன் விளைவாக — தங்கத்தின் தேவை வானளவு உயர்ந்தது. அதேசமயம் அதன் விலையும் “தங்கம் போலவே” பறக்கத் தொடங்கியுள்ளது!
மொத்தத்தில் சொல்லப்போனால் — உலக பொருளாதார நிச்சயமின்மையின் மத்தியில், தங்கம் மீண்டும் ஒரு நம்பிக்கைக்குரிய தங்க புகலிடமாக மாறி வருகிறது!