கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா அருகே, கீசரில் ஏற்பட்ட வாயு கசிவால் இரு சகோதரிகள் உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தை சேர்ந்த அல்தாப் பாஷா தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலை, அல்தாப் பாஷாவின் இரண்டாவது மகள் குல்பாம் தாஜ் (23) மற்றும் நான்காவது மகள் சிம்ரன் தாஜ் (20) இருவரும் குளிக்க குளியலறைக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் அல்தாப் பாஷா கதவை தட்டியபோது பதில் எதுவும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது குளியலறை முழுவதும் கியாஸ் நெடி நிரம்பியிருந்ததுடன், இரு சகோதரிகளும் மயக்க நிலையில் கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், இருவரும் மூச்சுத்திணறி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரியப்பட்டணா போலீசார் சம்பவ இடத்தையும் மருத்துவமனையையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வெந்நீருக்காக கீசர் இயக்கியபோது வாயு கசிவு ஏற்பட்டதாகவும், குளியலறையில் ஜன்னல் இல்லாததால் கியாஸ் வெளியேறாமல் சுவாசம் அடைப்பு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.