
வங்கக் கடலில் மோந்தா புயல் தீவிர புயலாக வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. பின்னர் மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய பகுதியில் நாளை புயலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மோந்தா என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று இந்த புயல் தீவிர புயலாக மாறி ஆந்திர கடலோரம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயலால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் ராணிபேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மோந்தா புயல் காரணமாக தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K