சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் பெயராக உண்ணிகிருஷ்ணன் போற்றி பெயர் உள்ளது. சபரிமலை உபயதாரராக வலம் வந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் தங்க கவசங்களை செம்பு என ரெஜிஸ்டரில் பதிவுசெய்த சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். துவார பாலகர் தங்க கவசம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்திலும், தங்க வாசல் மோசடி வழக்கில் 6-வது இடத்திலும் முராரி பாபு பெயர் உள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோயிலில் உள்ள 476 கிராம் எடையுள்ள தங்கம் கர்நாடகா மநிலம் பெல்லாரியில் உள்ள கோவர்த்தன் என்பவரது நகைக்கடையில் விற்பனை செய்ததாக உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலத்த்தில் தெரிவித்துள்ளார்.
உண்ணிகிருஷ்ணன் போற்றி
இதையடுத்து உண்ணிகிருஷ்ணன் போற்றியையும் அழைத்துக்கொண்டு நேற்று காலை பெல்லாரி சென்ற சிறப்பு விசாரணைக்குழு கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து சுமார் 400 கிராம் தங்கக்கட்டிகளை மீட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனை எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியது. அதில் சபரிமலை தங்கம் கொள்ளைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தங்கத்தை வாங்க மட்டுமே செய்ததாகவும் கோவர்த்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளார்.
கைதுசெய்யப்பட்ட முராரிபாபு
சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எடையில் கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றியின் வீட்டில் இருந்து தங்க நாணயங்களும், இரண்டு லட்சம் ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டன. உண்ணிகிருஷ்ணன் போற்றியை வரும் 30-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்துவிட்டு, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும். எனவே அதற்குள் சபரிமலை தங்கம் கொள்ளை குறித்த கூடுதல் தகவல்களை அவரிடம் இருந்து வெளிக்கொண்டுவர சிறப்பு விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.