ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார். மேலும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழா மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினையொட்டி மதுரையில் மதுபான டைகள் மூன்று நாட்கள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட பகுதிகளில் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழா முக்கியமாக பார்க்கப்படுக்கிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் பகுதிகளில் அதிமான நபர்கள் விழாவிற்கு வருகை தருவார்கள். இதனால் தென் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்நிலையில் நேற்று தேவரின் தங்கக் கவசம் அதிமுக நிர்வாகிகள் சார்பில் வங்கியில் இருந்து பெறப்பட்டு, தேவர் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி ஒட்டுமொத்தமாக நடைபெறும் இந்த விழாக்களுக்கு மதுரை மையமாக அமைந்துள்ளது. இதனால் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 27.10.2025 - மருது பாண்டியர்கள் நினைவு நாள் விழா மற்றும் (29.10.2025 - 30.10.2025) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினையொட்டி மதுபானக் கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
27.10.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 118 வது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டும் மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டும் பொருட்டு 27.10.2025 (மாலை 7 மணி வரை மற்றும் 29.10.2025, 30.10.2025 ஆகிய தினங்களில் மட்டும்) FL1/FL2/FL3/FL3A/FL3AA/FL4 மற்றும் FL11 உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள்.
மனமகிழ் மன்றங்கள். தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், படை வீரர்கள் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினங்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.