பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!
Vikatan October 29, 2025 06:48 AM

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதுகின்றன.

இவ்வாறிருக்க, வங்காளதேசத்துக்கெதிரான லீக் போட்டியில் ஃபீல்டிங்கின்போது இந்திய ஓப்பனிங் வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பிரதிகா ராவல் - Pratika Rawal

இந்த காயத்தின் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பிரதிகா ராவல் விலகினார். நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் அப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய பிரதிகா ராவல் அரையிறுதியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதோடு, அவருக்கு மாற்று வீராங்கனையாக யார் வரப்போகிறார், ஓப்பனிங்கில் யார் இறங்கப்போகிறார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

இந்த நிலையில்தான், 15 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி சில நாள்களிலேயே மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்பட்ட அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மாவை பிரதிகா ராவலுக்குப் பதில் இந்தியா தேர்வு செய்திருக்கிறது.

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இதுகுறித்து ஐ.சி.சி தனது இணையதளப் பக்கத்தில், ``கணுக்கால் காயம் காரணமாக இந்தியாவின் ஓப்பனிங் வீராங்கனை பிரதிகா ராவல் நடப்பு ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

அக்டோபர் 30-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மாவை இந்தியா அறிவித்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.

Shafali Verma - ஷபாலி வர்மா

கடைசியாக 2022 ஜூலையில் இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, மோசமான ஃபார்ம் காரணமாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்துக்கெதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக ஷபாலி வர்மா தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் 29 போட்டிகளில் 644 ரன்கள் அடித்திருக்கிறார். அதேசமயம், சர்வதேச டி20 கரியரில் 90 போட்டிகளில் 2221 ரன்கள் அடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஓராண்டாக தேசிய அணியில் இடம்பெறாமல் இருந்த ஷபாலி வர்மா கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அணியில் இடம்பிடித்து 176 ரன்கள் அடித்திருந்தார்.

எனவே, பிரதிகா ராவலுக்குப் பதிலாக ஷபாலி வர்மா அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அரையிறுதியில் களமிறக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான். அணி என்ன முடிவெடுக்கிறது என்பதை அக்டோபர் 30-ல் பார்க்கலாம்.

`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.