Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்.
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடிய பாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்.
உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூட பாதிக்கப்படலாம். எனவே, இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் என எல்லாமே ஆரோக்கியமாக இருக்க ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.
பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?
ரத்த அழுத்தமானது 120/80-க்குள் இருக்க வேண்டும். 121 முதல் 135 வரை (121/89 - 135/89) அதிகரிக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
140/90- என்பதைத் தொட்டுவிட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றினால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. BP அளவை மருத்துவரிடம் செக் செய்து கொள்வதே சிறந்தது.
அது தவிர்த்து பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஏனென்றால், மருத்துவமனைக்கு வருவதால் பிபி அதிகரிக்கும் மக்கள் பலர். அதற்கு 'வொயிட் கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என்றே பெயர்.
அதேபோல, ' ஆம்புலேட்டரி பிபி மானிட்டரிங்' (Ambulatory blood pressure monitoring) என்றொரு கருவியும் உண்டு. வருடம் ஒருமுறை இதிலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இரவில் பொதுவாக பிபி அளவு குறைய வேண்டும்.
அப்படிக் குறையாவிட்டால் அதை 'நாக்டர்னல் ஹைப்பர் டென்ஷன்' (Nocturnal hypertension) என்று சொல்வோம். இதை ஹோம் பிபி மானிட்டர் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது.
BP checking
உணவில் அதிக உப்பும் கொழுப்பும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2 கப்புக்கு மேல் போக வேண்டாம். நீரிழிவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
80 முதல் 90 சதவிகித மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் அவசியம். பலருக்கும் அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், பிரச்னை இல்லை என மருந்துகளை நிறுத்தக்கூடாது. 10 முதல் 15 சதவிகித மக்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வே இருப்பதில்லை. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்படைவதையும் உயிரிழப்பையும் பெருமளவில் தடுக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.