ஆவடி அருகே திருநின்றவூர் நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்தது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்டம் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் மழையானது பெய்து வருகிறது. மழை காரணமாக நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன குறிப்பாக திருநின்றவூரில் உள்ள நத்தமேடு ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. இரண்டு அடிக்கு மேல் தேங்கி இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. குடியிருப்பு,சாலை என அனைத்திலும் நீர் தேங்கி இருப்பதால் அங்குள்ள பகுதி வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட 2 கிலோ மீட்டர் தொலைவில் எடுத்து வர செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல டியூப் மூலம் தற்காலிகமாக மிதவை ஏற்பாடு செய்து அதில் பயணித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் அனைத்தும் நத்தமேடு ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குடியிருப்பில் பெரும் பகுதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அரசு பட்டா வழங்கி உள்ளது.அதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதிலும் தற்போது மழை நீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மழைக்காலங்களில் நத்தமேடு ஏரி நிரம்பி ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் வீடுகளை சுற்றி தண்ணீர் இருப்பதால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும் ஏரியை தூர்வராமல் இருப்பதும் ஏறி நிரம்பினால் தண்ணீர் வெளியேறாமல் இருப்பதும் இந்த பாதிப்புக்கு காரணம் என்றும் உடனடியாக இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.