
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை ஒத்திவைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால், கேரள விளையாட்டு துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் கோபமடைந்தார். ஆத்திரத்தில் அவர் நிருபரின் காதில் கிசுகிசுத்ததோடு, மைக்கையும் கேமராவையும் தள்ளிவிட்டு சென்றார். அவருடன் இருந்த எம்.எல்.ஏ. ஏ.சி. மொய்தீனும் மைக்கை அணைக்குமாறு கேட்டு கொண்டார்.
நவம்பர் 17-ல் நடைபெறவிருந்த இப்போட்டி, ஃபிஃபாவின் ஒப்புதல் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக விளம்பரதாரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், அமைச்சர் அப்துரஹிமான் தரப்பில், கேரளாவை சேர்ந்த சில தனிநபர்கள் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதியதே தாமதத்திற்கு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், போட்டிக்கு தயாரான கொச்சியின் ஜவஹர்லால் நேரு மைதான சீரமைப்பில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் குற்றம் சாட்டியுள்ளார். விதிகளை மீறி மரங்கள் வெட்டப்பட்டதாகவும், அரசு 'சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்களில்' ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போட்டி இரத்தான நிலையில், மைதானத்தின் எதிர்காலம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
Edited by Siva