தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் ஒரு வாரத்திற்கு மேல் தியேட்டரில் ஓடினாலே பெரிய விஷயம். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களே ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே வசூலை பெறுகிறது. இப்போது ஒரு திரைப்படத்தின் ஆயுட்காலம் என்பது அதிகபட்சம் இரண்டு வாரமாக சுருங்கிவிட்டது. பல நூறு கோடி வசூல் என்றாலும் அது அந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிடைப்பதுதான். மக்களிடம் பெரும் ஆதரவு பெற்ற சில படங்கள் மட்டுமே அதற்கு மேல் தியேட்டர்களில் ஓடுகிறது. ஆனால் அவை மிகவும் அரிதானவை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு திரைப்படம் 30 வருடங்களாக ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைவிட ஆச்சரியம் அந்த படத்தை ஒரு ரசிகை 30 வருடங்களாக தினமும் அந்த தியேட்டருக்கு சென்று பார்க்கிறார் என்றால் நம்பு முடிகிறதா? ஆனால் இந்த இரண்டுமே உண்மை.பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சோப்ரா இயக்கி ஷாருக்கான், காஜல், அம்ரீஷ் பூரி, அனுபம் கேர் உள்ளிட்ட பலரும் நடித்து 1995ம் வருடம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியான ஹிந்தி படம்தான் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. இளசுகளை கவரும் வகையில் காதல் ரசம் சொட்ட சொட்ட இப்படத்தை உருவாக்கியிருந்தனர். அதோடு, இனிமையான பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.

4 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் அந்த காலத்திலேயே 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைவிட ஆச்சரியம் என்னவெனில் மும்பையில் உள்ள மராத்த மந்திர் (Maratha Mandir) என்கிற ஒரு திரையரங்கில் இந்த படம் இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறது. தினமும் காலை 11:30 மணிக்கு இந்த காட்சி திரையிடப்படுகிறது. இப்பொழுதும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளம் காதலர்கள், ஷாருக்கான் ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் சென்று இப்படத்தை பார்க்கிறார்கள். பால்கனி 50 ரூபாய், மற்ற இருக்கைகளுக்கு 30 ரூபாய் என டிக்கெட் கொடுக்கப்படுகிறது.
அதிலும் ஒரு பெண் ரசிகை கடந்த 30 வருடங்களாக தினமும் காலை வந்து இந்த படத்தை படம் பார்க்க வருகிறாராம். இதுதான் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக தொடர்ந்து வருவதால் அவருக்கு தியேட்டர் நிர்வாகம் இலவச டிக்கெட் கொடுத்து வருகிறது. 500 இருக்கைகள் கொண்ட மராத்தா மந்திர் திரையரங்கில் இப்போதும் இந்த படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அப்படி ஒன்னும் கூட்டம் குறைவில்லை என்கிறார்கள்.அதிலும் நாடு முழுவதும் இருந்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் வருகிறார்களாம்.

கடந்த 2015ம் ஆண்டு இந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட தியேட்டர் நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் படத்தை தூக்கக்கூடாது என ஷாருக்கான் ரசிகர்கள் பெரிய போராட்டமே நடத்தி அதை தடுத்துவிட்டார்களாம். தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே திரைப்படம் ஷாருக்கானின் திரைவாழ்வில் முக்கிய படம் என்பதையும் தாண்டி, இப்போதும் இளசுகளின் மனம் கவர்ந்த காதல் காவியமாகவே இருக்கிறது.