காங்கிரஸ் கூட்டத்தில் பாடப்பட்ட வங்கதேச தேசியகீதம்; தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை; அசாம் முதல்வர் உத்தரவு..!
Seithipunal Tamil October 30, 2025 11:48 AM

அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசிய கீதத்தை பாடியமை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் , அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

அசாமில் ஸ்ரீபூமி மாவட்டத்தில் வங்காளிகள் அதிகம் வாழும் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமார் சோனார் பாங்லா' பாடலை பாடியுள்ளார்.  இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பேசுகையில்:  'வங்கதேச தேசிய கீதத்தை பாடியதை ஒருபோதும் ஏற்க முடியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன். சட்டத்தில் உள்ள விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தேசிய கீதங்களை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வங்கதேச தேசிய கீதத்தின் இரு வரிகள் மட்டுமே பாடப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.