'குகேஷுக்கு வழங்கியதைப் போல கார்த்திகாவுக்கு கோடிகளில் பரிசுத்தொகை வழங்காதது ஏன்?' - காரணம் என்ன?
Vikatan October 29, 2025 10:48 PM

'சாதித்த கார்த்திகா!'"

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் தொடர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவை தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், ஒரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

செஸ்ஸில் உலக சாம்பியனான குகேஷுக்கு வழங்கியதைப் போல பெரியளவிலான ஊக்கத்தொகையை கார்த்திகாவுக்கு வழங்கவில்லை. தமிழக அரசு விளையாட்டிலும் பாரபட்சம் பார்க்கிறதென அரசை நோக்கி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கார்த்திகா

குகேஷ் உலக சாம்பியனான போது அவரைப் பாராட்டி 5 கோடி ரூபாயை தமிழக அரசு ஊக்கத்தொகையாக வழங்கியிருந்தது. பின்னர் வடசென்னையைச் சேர்ந்த காசிமாவும் கேரமில் உலக சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார்.

குகேஷுக்குக் கொடுத்ததைப் போல காசிமாவுக்கும் 5 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் எனும் குரல்கள் வலுவாக எழுந்தன.

"தகுதிக்கும் திறமைக்கும் எந்தப் படிநிலையும் இல்லை" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய பா.ரஞ்சித்

விமர்சனங்களைத் தொடர்ந்து காசிமாவுக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியிருந்தது. அதேமாதிரிதான் இப்போது பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் கார்த்திகா பங்குபெற்றிருந்த இந்திய அணி சாம்பியனாகியிருந்தது.

விளிம்புநிலை மக்கள் வசிக்கும் கண்ணகி நகரிலிருந்து புறப்பட்டு வந்து சாதித்தவர் என்பதால் கார்த்திகாவை தமிழகமே கொண்டாடியது. அவருக்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியது. இதைத்தான் பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Gukesh

'பரிசுத்தொகையில் பாரபட்சம்?'

செஸ்ஸில் சாதிக்கும் பையனுக்கு 5 கோடி ரூபாய் கபடியில் சாதிக்கும் பெண்ணுக்கு வெறும் 25 லட்ச ரூபாயா எனும் கேள்வியை விமர்சனமாக முன்வைக்கின்றனர். கார்த்திகாவின் வெற்றி வெறுமன விளையாட்டு வரைமுறைகளுக்குள் மட்டுமே வைத்து பார்க்க முடியாது. அவரின் சமூகப் பின்னணியுடன் சேர்த்துதான் இந்த வெற்றியை அணுக வேண்டும்.

“சத்தான சாப்பாடு இல்லை, மைதானம் இல்லை... ஆனாலும் பதக்கங்களைக் குவிக்கிறோம்!” - கண்ணகி நகர் கபடிகுழு

இதில் இன்னொரு தரப்பு கருத்து இருப்பதையும் அறிய முடிகிறது. தமிழக அரசு வயதின் அடிப்படையிலும், போட்டியின் தன்மையின் அடிப்படையிலும் இந்தத் தொடர்களில் வெல்வோருக்கு இவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கொள்கை முடிவே வைத்திருக்கிறது.

அதன்படி ஆசிய அளவில் தங்கம் வெல்லும் இளையோருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கார்த்திகாவுக்கு அதைவிட அதிகமாக 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. கார்த்திகாவின் வெற்றிக்கு ஏற்ற நியாயமான ஊக்கத்தொகையே வழங்கப்பட்டிருக்கிறது எனச் சில வாதிடுகின்றனர்.

Karthika

'அரசு வட்டாரத்தின் விளக்கம்!'

இதுசம்பந்தமாக தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"கார்த்திகாவின் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. அவருக்கு ஏற்ற நியாயமான பரிசுத்தொகையைத்தான் அரசு அறிவித்திருக்கிறது. சொல்லப்போனால் அதிமாகத்தான் கொடுத்திருக்கிறோம்.

ஆசிய அளவிலான இளையோர் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு 15 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்பதே அரசாணை. ஆனால், கார்த்திகாவுக்கு அந்த 15 லட்ச ரூபாயோடு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பிலும் 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயாக வழங்கியிருக்கிறோம்.

50 கி.மீ தூரத்துக்கு அப்பால் துரத்தப்படும் தமிழர்கள்! - டெல்லியிலும் ஒரு ‘கண்ணகி நகர்’

கார்த்திகா சென்னை திரும்பியவுடன் அவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரைமணி நேரத்தில் முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்கிறார். கார்த்திகாவின் தேவைகள் அத்தனையும் கேட்டறியப்பட்டிருக்கிறது. கண்ணகி நகரில் பயிற்சி மையங்களை அமைக்கப்போகிறோம்.

இதெல்லாம் வேறெந்த மாநிலத்திலும் நடக்காதவை. குகேஷையும் கார்த்திகாவையும் ஒப்பிட முடியாது. குகேஷ் வென்றது உலக சாம்பியன் பட்டம். கார்த்திகா ஆசியளவில் இளையோர் போட்டியில்தான் வென்றிருக்கிறார். அவர் அடுத்தடுத்த கட்டங்களில் வெல்லும்போது அதற்கேற்ற பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.

கார்த்திகா வென்ற அதே கேட்டகரியில் அபினேஷ் என்ற பையனும் தங்கம் வென்றிருக்கிறார். அவருக்கும் 25 லட்ச ரூபாய்தான் வழங்கியிருக்கிறோம். அவரும் வடுவூர் கிராமத்தில் தந்தையை இழந்த எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். SDAT விடுதியில் தங்கி விளையாடிதான் தங்கம் வென்றார். இந்த விவகாரத்தை எமோஷனலாக அணுகாமல், யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அணுக வேண்டும்" என்றார்.

Gukesh

உலக சாம்பியன்ஷிப்பை வெல்பவர்களுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றுதானே அரசாணை சொல்கிறது. எனில், குகேஷுக்கு எப்படி 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என அதே அதிகாரியிடம் கேட்டேன். "நீங்கள் குறிப்பிடும் அந்த வகைக்குள் செஸ் வராது. குகேஷுக்கு 'Special Condition' அடிப்படையிலேயே 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. குகேஷையும் கார்த்திகாவையும் ஒப்பிட முடியாது" என்றார்.

இறையன்பு IAS-ஆல் முகம் மாறிய கண்ணகி நகர்! | முதல் தலைமுறை கற்றல் மையம் | Nambikkai Awards 2024
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.