300 விண்ணப்பங்கள் மறுப்பு…. வீடு இல்லாத நிலை…. வெளிநாட்டு 'கனவு வாழ்க்கை' எளிதல்ல…. ஒரு மாணவரின் கண்ணீர் கதை….!!
SeithiSolai Tamil October 29, 2025 10:48 PM

பெரிய கனவுகளுடன் ஜெர்மனிக்குப் படிக்கச் சென்றார் பிரதமேஷ் பாட்டீல். வேலையை விட்டுவிட்டு, வெறும் நான்கு சூட்கேஸ்களுடன் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் ஆரம்பத்திலேயே அவருக்கு பெரும் சவால்கள் காத்திருந்தன. முதல் சில நாட்கள், ஒன்பது பேர் ஒரே அறையிலும், ஒரே ஒரு கழிவறையுடனும் வாழ நேரிட்டது. அவர் பகுதி நேர வேலைக்காக ஒரு உணவகத்தில் சமையலறை மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்வது, டெலிவரி செய்வது மற்றும் கிடங்கு வேலை பார்ப்பது எனப் பல பணிகளைச் செய்தார்.

இதற்காக அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு வெறும் 8 யூரோக்கள் மட்டுமே ஊதியமாகக் கிடைத்தது. பிரதமேஷின் கஷ்டங்கள் இதோடு நிற்கவில்லை. அவர் தனது வீட்டு உரிமையாளரால் ஏமாற்றப்பட்டு பெரும் பணத்தை இழந்தார். இதனால் சிறிது காலம் வீடில்லாமல் கூட இருக்க வேண்டியிருந்தது. படிப்பு மற்றும் வேலைக்கான அவரது தேடல் மிகவும் கடினமாக இருந்தது. அவர் 300-க்கும் மேற்பட்ட இன்டர்ன்ஷிப் விண்ணப்பங்களை அனுப்பியும், அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இரண்டு வருடக் காத்திருப்புக்குப் பிறகுதான் அவருக்கு ரெசிடென்ஸ் பெர்மிட் கிடைத்தது. இறுதியாக ஒரு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைத்தபோது, தன் பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கையில், அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அப்போது அவரது தாய் சொன்ன, “கடின உழைப்பு எப்போதும் பலன் தரும்” என்ற வார்த்தைகள் அவரை மிகவும் உருக்கின. பிரதமேஷின் இந்தக் கதை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தொட்டது.

View this post on Instagram

A post shared by Prathamesh Patil (@prathameshpatilpp7)

இதை படித்த பல மாணவர்கள் தங்களின் கடினமான அனுபவங்களைப் பகிர்ந்தனர். ஒரு மாணவர், 625 விண்ணப்பங்களுக்குப் பிறகுதான் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். சமூக வலைதளங்களில் ‘கனவு வாழ்க்கை’ மட்டுமே தெரிந்தாலும், ஒவ்வொரு கனவுக்கும் ஒரு விலை உண்டு என்பதை பிரதமேஷ் வலியுறுத்தினார். இந்தக் கடினமான பயணம் ஒரு தொடக்கம் மட்டுமே என்று நம்பிக்கையுடன் கூறி, முடிவில் அவர் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.