காஸாவில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலில் 33 பேர் பலி - அமெரிக்கா கூறுவது என்ன?
BBC Tamil October 30, 2025 02:48 AM
Abdallah Fs Alattar/Anadolu via Getty Images இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

ஹமாஸ் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது" என்று இஸ்ரேலிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹமாஸ் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியது என்றும் பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்புவதற்கான நிபந்தனைகளை மீறியது என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் குற்றம் சாட்டினார்.

இதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்த ஹமாஸ், போர் நிறுத்தத்தை "முழுமையாக கடைபிடிப்பதில் உறுதிபூண்டுள்ளதாக" கூறியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் 33 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல்கள் காஸா நகரம், பெய்ட் லா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் பல குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தின.

இருப்பினும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், போர் நிறுத்தம் அப்படியே தொடர்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், அவர் ராணுவத்திற்கு ஒரு "வலுவான தாக்குதலை" நடத்த உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான காரணத்தை அதில் குறிப்பிடவில்லை.

மறுபுறம், இஸ்ரேலிய அமைச்சர் காட்ஸ் செவ்வாய்க்கிழமை காஸாவில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதன் மூலம் ஹமாஸ் 'சிவப்புக் கோட்டை தாண்டியுள்ளது' என்று கூறினார்.

"வீரர்களை தாக்கியதற்கும், பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை மீறியதற்கும் ஹமாஸ் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இஸ்ரேலிய துருப்புகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் துப்பாக்கி சுடும் தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. அதே நேரத்தில் பாலத்தீன ஊடகங்கள் இப்பகுதியில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதல்கள் நடந்ததாக தெரிவித்தன.

'சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர்' Reuters

வடக்கில் காஸா நகரம் மற்றும் தெற்கில் கான் யூனிஸ் போன்ற நகரங்கள் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளாகியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

காஸா நகரின் தெற்கே உள்ள சப்ரா பகுதியில் ஒரு வீட்டில் குண்டு வீசப்பட்டதில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அல்-ஷிஃபா மருத்துவமனையும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸில் ஒரு வாகனம் தாக்கப்பட்டதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்று சிவில் பாதுகாப்பு அமைப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கவில்லை என்று கூறியிருந்தது.

"ரஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஹமாஸ் தெளிவுபடுத்துகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளது. காஸா பகுதிகளில் பாசிச இஸ்ரேலிய ராணுவம் நடத்திய குண்டுவீச்சு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று ஹமாஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. அதனால் இங்கும் அங்கும் சில சிறிய மோதல்கள் இருக்காது என்று அர்த்தமல்ல" என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஹமாஸ் அல்லது காஸாவில் உள்ள வேறு ஒருவர் இஸ்ரேலிய வீரர் மீது தாக்குதல் நடத்தியதை நாங்கள் அறிவோம். இஸ்ரேல் பதிலளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் அதிபர் டிரம்பால் கொண்டு வரப்பட்ட அமைதி அப்படியே இருக்கும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு JACK GUEZ/AFP via Getty Images இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை உடனே மீட்டு தருமாறும் டெல் அவிவ் நகரில் போராடுபவர்கள் கோருகின்றனர்.

காஸாவில் இறந்த 13 பணயக்கைதிகளில் எவருக்கும் சொந்தமில்லாத மனித எச்சங்கள் அடங்கிய ஒரு சவப்பெட்டியை ஹமாஸ் திங்கள்கிழமை இரவு ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

தடயவியல் சோதனைகளில் ஹமாஸ் வழங்கியது ஓஃபிர் சர்பாட்டியின் உடல் பாகங்கள் என்று கண்டறியப்பட்டதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரது உடல் 2023 -ன் பிற்பகுதியில் காஸாவில் இஸ்ரேலிய படைகளால் மீட்கப்பட்டது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் "தெளிவான மீறல்" என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் டிரோன் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் "முன்பே தயாரிக்கப்பட்ட கட்டமைப்பில் இருந்து சடலங்களின் எச்சங்களை அகற்றி அருகிலேயே புதைப்பதைக் காட்டியது" என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

இந்த சம்பவம் கிழக்கு காஸா நகரில் திங்கள்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

"சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளை அழைத்து ஒரு பணயக்கைதியின் உடலை மீட்டது போல் நாடகமாடினர்." என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

ஹமாஸ் இந்த குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்று கூறியதுடன், இஸ்ரேல் "புதிய தாக்குதல்களுக்கு தவறான சாக்குப்போக்குகளை உருவாக்க முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பின்னர் "போலி"யாக உடல்களை மீட்டெடுப்பதை கண்டித்தது. "ஹமாஸின் வேண்டுகோளின் பேரிலும் நல்ல நம்பிக்கையுடனும்" வந்திருப்பதாக அதன் குழு கூறியது.

இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் , "வீடியோவில் காணப்பட்டபடி, அவர்கள் வருவதற்கு முன்பு ஒரு உடல் அங்கு புதைக்கப்பட்டது சம்பவ இடத்தில் உள்ள எங்கள் குழுவுக்கு தெரியாது. பொதுவாக, ஒரு நடுநிலையாளராக, எங்கள் பங்கு உடல்களை தோண்டுவது அல்ல" என்றது.

"எங்கள் குழு உடல் மீட்கப்பட்டதை மட்டுமே கண்டது, ஆனால் அதன் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்து எந்த தகவலும் இல்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்த ஒப்பந்தம் பின்பற்றப்பட வேண்டியது முக்கியமானது, குறிப்பாக பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் போது, ஒரு போலி உடல் மீட்பு நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று குழு கூறியது.

போர் நிறுத்த விதிகள் ATEF SAFADI/EPA/Shutterstock செவ்வாய்கிழமை இரவு, காஸாவில் பலத்த வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.

அமெரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச காஸா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

முதல் கட்ட போர் நிறுத்தத்தை அமல்படுத்த இது தயாரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 10 முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 72 மணி நேரத்திற்குள் மொத்தம் 20 பணயக்கைதிகள் மற்றும் 28 பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பும் என்று இந்த திட்டம் கூறுகிறது.

250 பாலத்தீன கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்ட 1,718 பேருக்கு ஈடாக எஞ்சியிருந்த 20 இஸ்ரேலிய பணயக் கைதிகளும் அக்டோபர் 13 அன்று விடுவிக்கப்பட்டனர்.

கூடுதலாக, ஹமாஸ் திருப்பி அனுப்பிய 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பணயக்கைதிகளின் (ஒரு தாய்லாந்து மற்றும் ஒரு நேபாளி) உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் இதுவரை 195 பாலத்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளது.

11 இஸ்ரேலியர்கள், தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், மற்றும் தாய்லாந்தை சேர்ந்தவர் ஒருவர் என 13 பணயக்கைதிகளின் உடல்கள் இன்னும் காஸாவில் உள்ளன.

உடல்களை தேடி எடுப்பதில் சிக்கல் : ஹமாஸ்

சனிக்கிழமையன்று, ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யா, இஸ்ரேலிய ராணுவம் "காஸாவின் நிலப்பரப்பை மாற்றியமைத்ததால்" சடலங்களைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது" என்று கூறினார்.

"சடலங்களை புதைத்தவர்களில் சிலர் தியாகிகளாகி உள்ளனர் (கொல்லப்பட்டுள்ளனர்), சிலருக்கு உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன என்று நினைவில் இல்லை" என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், அனைத்து உடல்களின் இருப்பிடங்களும் ஹமாஸுக்கு தெரியும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.

காஸாவில் உள்ள பணயக்கைதிகளின் உடல்களில் ஒருவரை தவிர பிற அனைவரும் அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது கடத்தப்பட்ட 251 பேரில் அடங்குவர்.

ஹமாஸின் அந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 68,530 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.