ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள சிறப்பு விஜிலென்ஸ் நீதிமன்றம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு தேர்வில் பணத்திற்கு வேலை என்ற மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட 114 வேலை தேடுபவர்களுக்கு நிபந்தனை கூடிய ஜாமின் வழங்கியுள்ளது.
ஒடிசாவில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த காவல் சேவைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால், பெர்ஹாம்பூரில் மூன்று இடைத்தரகர்கள் உட்பட 117 வேலை தேடுபவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒடிசா காவல் ஆட்சேர்ப்பு வாரியத்தால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக குற்றப்பிரிவு மேலும் ஆறு பேரைக் காவலில் எடுத்து விசாரித்தது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் சிறப்பு விஜிலென்ஸ் நீதிபதி ஞானேந்திர குமார் பாரிக் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இரண்டு உத்தரவாதங்களுடன் ரூ.50,000 பத்திரத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறதாகவும், மேலும் விசாரணையின் போது புலனாய்வு அமைப்புகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், பெரும் தொகைக்கு ஈடாக போலீஸ் எஸ்ஐ வேலையைப் பெறுவதற்காக விண்ணப்பதாரர்களை கவர்ந்திழுத்து மோசடி செய்த மற்ற 09 பேருக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வேலை தேடுபவர்கள் இடைத்தரகர்களுக்கு முன்கூட்டியே ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், வேலை கிடைத்த பிறகு ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.