ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ பயணிகளின் செல்ஃபோன் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்; தெற்கு ரயில்வே அசத்தல் திட்டம்!
Top Tamil News October 30, 2025 04:48 PM

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். செளகரியம், பாதுகாப்பு, குறைந்த கட்டணம் என பல காரணங்கள் இதற்கு இருக்கின்றன. மேலும், உடைமைகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கும் ரயில்தான் மக்களின் முதல் தேர்வாக இருக்கிறது. குறிப்பாக, செல்போன், லேப்டாப் போன்ற விலை உயர்ந்த பொருட்களை மக்கள் துணிச்சலாக ரயிலில் எடுத்து செல்ல முடிகிறது. ஆனாலும், சில நேரங்களில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் ரயில்களில் திருடுப் போய் வருகின்றன.

இதனை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வேயின் பாதுகாப்புப்படை (ஆர்பிஎப்) நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திருடப்பட்ட செல்போன்களை டிராக் செய்து மீட்டு கொடுத்து வருகிறது. இந்த போர்ட்டல் தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த போர்ட்டலின் பெயர்தான் மத்திய உபகரண அடையாள பதிவேடு (CIER). இதனை தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து ரயில்வேயின் பாதுகாப்புப்படை (ஆர்பிஎப்) பெற்று கையாண்டு வருகிறது.

எப்படி புகார் கொடுப்பது?

ரயில் பயணத்தின்போது ரயிலுக்குள்ளோ அல்லது ரயில் நிலையத்திலோ உங்களது செல்போன் காணாமல் போகிவிட்டால், உடனடியாக அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அல்லது உதவி எண் 139க்கு அழைக்கலாம். இல்லையெனில், ரயில் மதாத் (RailMadad) போர்ட்டல் மூலம் புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரில், தொலைந்து போன செல்போனின் பிராண்ட், நிறம், மாடல், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். இதை செய்து உடனேயே, அந்த மொபைல் பிளாக் செய்யப்படும். இதனால் உங்கள் செல்போனை ஒருவர் தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும்.

மேலும், செல்பொன் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதனால், புதிய சிம் போடப்பட்டதுமே, செல்போன் இருக்கும் இடத்தை ஆர்பிஎஃப் அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவர். பின் அவர்களை தொடர்பு கொண்டு, செல்போனை உரிய உரிமையாளருக்கு பாதுகாப்பாக ஒப்படைக்க ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120க்கும் மேற்பட்ட ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா, ரெட்மி போன்ற பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த போன்களை மீட்டு, உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது. தென் மாநிலங்களில் திருடப்பட்ட செல்போன்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற தொலைதூர மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி அருள்ஜோதி கூறுகையில், "ரயிலில் பயணிக்க வரும் பயணிகளின் செல்ஃபோன்கள் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் தொலைத்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அல்லது RailMadad-ல் புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரில் அந்த போன் என்ன மாடல், அதன் நிறம் என்ன, அது என்ன பிராண்ட், அந்த செல்ஃபோனில் பயன்படுத்திய சிம் கார்டு எண் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

இந்த புகாரில் செல்ஃபோனின் ஐஎம்இஐ நம்பர் எதுவும் தேவையில்லை, மேற்கூறிய தகவலை மட்டும் மத்திய உபகரண அடையாள பதிவேற்றம் மூலம் பதிவேற்றப்பட்டு. அதன் மூலம் செல்ஃபோனை பிளாக் செய்து விடுவோம்.

அதன் பிறகு அந்த செல்ஃபோனை அவர்கள் வேறு யாரிடமாவது விற்றாலோ அல்லது அவர்களே புதிய சிம்கார்டை அந்த செல்ஃபோனில் போடும்போது அந்த தகவல் மத்திய உபகரண அடையாள பதிவேற்றம் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்து விடும்.

உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, இதுபோன்று செல்ஃபோன் காணாமல் போனது குறித்து புகார் விவரங்களை தெரிவித்து, அந்த நபரை அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்திற்கு சென்று செல்ஃபோனை ஒப்படைக்குமாறு தெரிவித்து விடுவோம்.

இதுவரை கடந்த மூன்று மாதங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மத்திய உபகரண அடையாள பதிவேற்றத்தின் மூலம் 230 செல்ஃபோன்களில் 130 செல்ஃபோன்களை மீட்டுள்ளோம்.

இதில் 70-க்கும் மேற்பட்ட செல்போன்கள் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலத்தில் மீட்கப்பட்டவை. மற்ற செல்போன்கள் மகாராஷ்டிரா,அசாம், ராஜாஸ்தான் ஆகிய மாநிலங்களில் மீட்கப்பட்டு அங்கு உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மூலம் கொரியரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மற்ற மாநிலங்களில் திருடப்பட்ட செல்போன்கள் தமிழ்நாட்டில் இருந்து மீட்கப்பட்டால் நாங்கள் அதனை கொரியர் மூலம் அந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து விடுவோம்.

மத்திய தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படை இந்தத் திட்டத்தை கடந்த நான்கு மாதங்களாக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த சேவையை கொடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் செல்போனை திருடிய நபர்கள் அதனை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மறுத்தால், அவர்கள் வசிக்கும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இன்னும் 100 செல்ஃபோன்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்று அவர் கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.