ரஜினி சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய போது அவரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். ரஜினி படங்களுக்கு இனிமையான பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா. ரஜினி படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கிய காரணமாகவும் இருந்தது. இளையராஜாவும் ரஜினியும் நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால் 1994ம் வருடம் வெளியான வீரா படத்திற்கு பின் ரஜினிகாந்த் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. பாட்ஷா படத்தில் இளையராஜாவை இசையமைக்க தயாரிப்பாளர் அணுகிய போது அவர் ஒரு சம்பளம் கேட்டார். அது அதிகம் எனத் தோன்றியதால் அவர் ரஜினியிடம் சொல்ல இளையராஜாவை போனில் தொடர்பு கொண்ட ரஜினி ‘சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்’ என சொல்ல இளையராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது.

‘நீங்கள் வாங்கும் சம்பளம் பற்றி என்றாவது நான் பேசி இருக்கிறேனா?’ என கோபமாக கேட்க தொழில்ரீதியாக ராஜாவுக்கும், ரஜினிக்கும் இருந்த நட்பு முறிந்தது. எனவே, அந்த படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு தேவாவின் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கே முக்கிய காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ரஜினி நடித்த அண்ணாமலை, அருணாச்சலம் உள்ளிட்ட சில படங்களுக்கு தேவாவை இசையமைத்தார். அதன்பின் இளையராஜாவிடம் ரஜினி செல்லவே இல்லை.
அதேநேரம் நடிகர் கமல் தான் தயாரித்து, நடிக்கும் படங்களுக்கு இளையராஜாவை இசையமைக்க வைத்தார். அதோடு இளையராஜாவை கமல் அடிக்கடி சென்று சந்திப்பதும் உண்டு.
ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைக்க விட்டாலும் நேரம் கிடைக்கும்போது ரஜினி இளையராஜாவை அவரின் ஸ்டுடியோக்கு சென்று சந்திப்பதும் உண்டு. சமீபத்தில் அரசு தரப்பில் இளையராஜாவுக்கு விழா எடுத்தபோது ரஜினி அதில் கலந்துகொண்டார்.

தற்போது பல வருடங்களுக்கு பின் ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை நெல்சன் இயக்கப் போகிறார் என்பதும் சமீபத்தில் வெளியான செய்தி. அதேபோல் ஜெயிலர் 2-வுக்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையுமே கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அதோடு கமலோடு இணைந்து நடிக்கவுள்ள படம்தான் ரஜினியின் கடைசி படம். அதோடு சினிமாவுக்கு ரஜினி முழுக்கு போடவிருக்கிறார் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில்தான் கமல் திடீரென நேற்று இளையராஜாவை சந்தித்து பேசி இருக்கிறார்.
கமல்ஹாசனின் தயாரிப்பில் தொடர்ந்து ரஜினிகாந்த் 2 படங்களில் நடிக்கவிருப்பதால் அதில் ஏதேனும் ஒரு படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்கலாம் என்கிற எண்ணம் கமலுக்கு இருப்பதாக தெரிகிறது. அனேகமாக ரஜினியுடன் இணைந்து தான் நடிக்கும் படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 31 வருடங்களுக்கு பின் ரஜினியும் இளையராஜாவும் இணைந்தால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும்.