கோவை சாய் பாபா காலனி பகுதியில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ”பிரதமர் நரேந்திர மோடி, கரோனா நோய் தொற்று காலத்தில் சாலையோர வியாபாரிகள் வாழ்க்கை தர உயர்வுக்காக ‘ஸ்வநிதி’ என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து அமல்படுத்தினார். சொத்து பிணையமின்றி முதலில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு அதை திருப்பி செலுத்தினால் முறையே ரூ.25,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் ஏழை வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். குடியரசு துணைத் தலைவர் கோவை வருகையின் போது டவுன் ஹால் பகுதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, பாதுகாப்பு வளையத்திற்குள் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தனர். வரவேற்பு அளிக்க வந்த தொண்டர்கள் கூட மிக தொலைவில் நிறுத்தப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
வேண்டும் என்றே நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக அவர்கள் நுழைந்ததாக சந்தேகிக்கிறேன். காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மதுபோதையில் வந்த இளைஞர்கள் செய்வது அறியாமல் இச்செயலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
சம்பவம் நடந்த பகுதி இதற்கு முன்பு சி.பி.ராதாகிருஷ்ணன் எம்.பி-ஆக இருந்த போது குண்டுவெடிப்பு நடந்த பகுதியாகும். அதே போல் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. குடியரசு துணைத் தலைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. திராவிட மாடல் அரசு மீது எங்களுக்கு சந்தேகம் கூடுதலாக ஏற்படுகிறது.
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தை கூட சிலிண்டர் வெடி விபத்து என்று தான் தமிழக முதல்வர் கூறினார். இச்சம்பவத்தின் பின்னணி குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மத்திய அரசின் உதவியை நாங்கள் கோருவோம்” என்று வானதி சீனிவாசன் கூறினார்.