 
             
 
 
வெளிநாட்டில் கல்வி கற்பதை நோக்கமாகக் கொண்ட இந்திய மாணவர்களின் கனவாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தற்போது, 90,000 இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி விசாக்களுடன் உள்ளனர். இந்தச் சூழலில், யூடியூபரும் வர்ணனையாளருமான குஷால் மேஹ்ரா, இந்தியக் குடும்பங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு பாட்காஸ்டில் பேசிய அவர், “உங்கள் குழந்தைகளைக் கனடாவுக்கு அனுப்ப வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், ‘சிறந்த வாழ்க்கை’ என்ற வாக்குறுதியால் கவரப்பட்டு, அங்குச் சென்ற பின் சுரண்டல், வேலைவாய்ப்பின்மை மற்றும் அதிகரித்து வரும் பகைமையை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.
“>
மோசமான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் கனடாவின் நிலைமை பலவீனமடைந்து வருவதாக மேஹ்ரா வாதிட்டார். “போலி கல்லூரிகள் அல்லது முகவர்கள் மூலம் உங்கள் குழந்தைகளைக் கனடாவுக்கு அனுப்ப வேண்டாம். வாட்டர்லூ, யார்க் அல்லது வெஸ்டர்ன் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தால் அது வேறு விஷயம். ஆனால், யாராவது உங்களுக்கு டிப்ளோமா தொழிற்சாலைகளில் சேர வாய்ப்பளித்தால், அது உங்கள் எதிர்காலத்தை அழிக்கும் ஒரு பொறி. இந்தியாவில் தங்கி, உங்கள் வாழ்க்கையை இங்கேயே வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.
கனடாவில் குடியேற்றம் அதிகரித்துள்ளதால் வீடற்ற நெருக்கடி, வேலைவாய்ப்புகளில் அழுத்தம் மற்றும் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேஹ்ரா கூறினார். 2022 இல் நிறைவேற்றப்பட்ட ‘மோஷன் எம்44’ எனும் கொள்கை, சர்வதேச மாணவர்கள் முழுநேரமும் பணிபுரிய அனுமதித்ததால், இந்தியாவில் இருந்து மாணவர்கள் பெருமளவில் குவிந்தனர்.
இதனால், வீட்டின் வாடகை உயர்ந்து, நாட்டினரிடையே அந்நிய உணர்வு வளரத் தொடங்கியுள்ளது. இது தவிர, மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பது குறித்து அவர் எச்சரித்தார். “கடந்த மூன்று ஆண்டுகளில், நான் தனிப்பட்ட முறையில் 13 பெண்களை எனது சொந்தச் செலவில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளேன், ஏனெனில் அவர்கள் பாலியல் கடத்தலுக்கு ஆளாகியிருந்தனர்” என்று அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
டோரோண்டோவில் மட்டும் சுமார் 4,000 இந்திய வம்சாவளிப் பெண்கள் பாலியல் தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிக்கியுள்ளனர் என்று அவர் நம்புகிறார். வெளிநாட்டுக் கல்வி மோகத்தைத் தவிர்த்து, இந்தியாவிலேயே நல்ல பல்கலைக்கழகங்களில் முதலீடு செய்யுமாறு அவர் இந்தியக் குடும்பங்களை வலியுறுத்தியுள்ளார்.