கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!
Webdunia Tamil October 31, 2025 01:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியை சேர்ந்த 53 வயது பழனிவேலு, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். மருத்துவ செலவு மற்றும் கடன் சுமையால் கணவரை பராமரிக்க முடியாமல் அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, தனது இரு மகள்களின் உதவியுடன் பழனிவேலுவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். கொலையை மறைக்க, சுமார் 50 நாட்களுக்கு முன்னர் அவரது உடலை வீட்டின் முன்பே புதைத்தனர்.

தீபாவளியின்போது அக்கம் பக்கத்தினர் பழனிவேலுவை பற்றிக் கேட்டபோது, 'முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளோம்' என்று மகள்கள் முதலில் பொய் கூறினர். ஆனால் சந்தேகம் அதிகரிக்கவே, மூத்த மகள் தமிழ்ச்செல்வி, 'அப்பா இறந்துவிட்டார், நாங்களே அடக்கம் செய்துவிட்டோம்' என்று உண்மையை வெளிப்படுத்தினார். இதனால் சந்தேகமடைந்த பழனிவேலுவின் சகோதரி கஸ்தூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் தலைமறைவாக இருந்த மகாலட்சுமி, தமிழ்ச்செல்வி, சாரதா ஆகிய மூவரையும் கைது செய்து, வீட்டின் முன் புதைக்கப்பட்டிருந்த பழனிவேலுவின் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

கணவரின் நோய் மற்றும் கடனை சமாளிக்க முடியாமல், மனைவி மகள்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.