பைக்கில் சரவெடி வெடித்து வீலிங் செய்து அட்டகாசம்.. 4 இளைஞர்கள் அதிரடி கைது!
TV9 Tamil News October 31, 2025 01:48 PM

பெருந்துறை, அக்டோபர் 31 : ஈரோட்டில் (Erode) பைக்கில் பட்டாசு வெடித்தபடி வீலிங் செய்து சாகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இளைஞர்கள் பைக்கில் பட்டாசு வெடித்தபடி வீலிங் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வந்தன. இந்த வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஆபத்தான முறையில் சாலையில் வீலிங் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பைக்கில் பட்டாசு வெடித்தபடி வீலிங் செய்த இளைஞர்கள்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் ஆசிரியர் குடியிருப்புக்கு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில்,  சம்பவத்தன்று இந்த மேம்பாலத்திற்கு வந்த ஒருசில இளைஞர்கள் தங்களது பைக்கின் முகப்பு விலக்குகளின் மீது சரவெடி பட்டாசுக்களை தொங்கவிட்டு, அதனை வெடித்தபடி பைக்கில் மிகவும் ஆபத்தான முறையில் வீலிங் செய்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது ஸ்மார்ட்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் – சென்னையில் நாய், பூனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

வைரலான வீடியோ – அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை

இந்த வீடியோ மிக வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சம்பவம் காவல்துறையின் கவனத்திற்கு வந்த நிலையில், வீடியோவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என போலீசார் தேட தொடங்கியுள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதான சஞ்சய் ஆகாஷ், ஈரோட்டை சேர்ந்த சஞ்சய், பிரவின் மற்றும் கவின் ஆகிய 4 இளைஞர்களை கைது செய்தனர்.

இதையும் படிங்க : இரவில் வீட்டில் உறங்கியபோது தீ விபத்து.. பெண் பலி! செல்போன் சார்ஜர் காரணமா?

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.