 
            தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை என்றும், 13% மட்டுமே நிறைவேற்றியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் சாடியுள்ளார்.
கூட்டணி குறித்து சஸ்பென்ஸ்:
 
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு சில கட்சிகளில் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதற்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, எங்கள் உட்கட்சி பிரச்சினையாக இருந்தாலும் சரி, சுமுகமாக தீர்க்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்கூட்டியே தெரிவிக்க முடியாது, விரைவில் அறிவிப்பேன் என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
 
Also read: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!
10.5% இட ஒதுக்கீட்டை கொடுங்க:
 
வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்திருந்தால் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் என்று வேதனை தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் போராடியதால் தான் கோர்ட்டு உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளில் 7 ஆலைகளை திமுக கட்சியை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர். டாஸ்மாக் கடைகளை அடைத்த பின்னர் சந்து கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக அரசின் தோல்வி:
அதோடு, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து திமுக அரசு விளம்பர ஆட்சி நடத்துவதாக சாடிய அவர், கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றவில்லை என்றும், 13% மட்டுமே நிறைவேற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.