 
             
 
 
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தனது மருமகள் நீண்ட நாட்களாக மனரீதியாகத் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமேஷ் சந்திர குப்தா என்று அடையாளம் காணப்பட்ட அவர், தனது வீட்டில் தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து ஐந்து பக்கங்கள் கொண்ட தற்கொலைக் குறிப்பை போலீசார் கைப்பற்றினர்.
குப்தா தனது தற்கொலைக் குறிப்பில், பல ஆண்டுகளாகத் தனது மருமகள் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வேண்டுமென்றே தனக்கு ‘கரிந்த ரொட்டி’ (எரிந்த சப்பாத்தி) மற்றும் கெட்டுபோன குழம்பை அளித்ததுடன், தொடர்ந்து தன்னை அவமானப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இனி என்னால் இதைத் தாங்க முடியாது. இந்த அவமானத்துடன் வாழ முடியாது” என்று அவர் அந்தக் குறிப்பில் எழுதியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்தாவின் மகன் புஷ்பேந்திரா, தற்போது விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது மனைவி அதற்குப் பதிலாக வரதட்சணை மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குடும்பப் பிரச்சினைகளால் குப்தா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலைக் குறிப்பைப் பறிமுதல் செய்து, மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.