பள்ளிக்கரணை : `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட இடைக்கால தடை' - உயர் நீதிமன்றம் அதிரடி
Vikatan October 31, 2025 10:48 PM

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து, `சதுப்பு நிலத்தில் கட்டடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை’ எனவும் `சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும்’ அரசு விளக்கமளித்துள்ளது.

பள்ளிக்கரணை

இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்புநிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை கொட்டுவது, ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நீதிபதி அருள் முருகன் ஆகியோர் விசாரித்து சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.