ஜெர்மனியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு அரசு பள்ளி ஆசிரியை விடுப்பு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பரிசு வென்றதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜெர்மனியின் கோலோன் நகரில் வசிக்கும் 35 வயதான ஆங்கில ஆசிரியை டொமினிக் டபிள்யூ, கடந்த ஒரு ஆண்டாக நோய்விடுப்பில் இருந்திருக்கிறார்.
ஆனால் இந்த காலத்தில் அவர் ஜெர்மனியின் பிரபலமான இரண்டு சமையல் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டும் இருக்கிறார்.
Sick Leave
2024 ஆகஸ்டில் ஜெர்மனியின் VOX சேனலில் ஒளிபரப்பான தாஸ் பெர்ஃபெக்டே டின்னர் என்ற நிகழ்ச்சியில் டொமினிக் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு சுமார் 3,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2.7 லட்சம்) பரிசுத் தொகையை வென்றிருக்கிறார்.
அதன் பிறகு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ZDF சேனலில் ஒளிபரப்பான The Kitchen Battle நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். நோய் காரணமாக விடுப்பு எடுத்துவிட்டு இப்படி சமையல் ஷோக்களில் கலந்துக்கொண்டதால் கோலோன் நகர நிர்வாகம் அவர்மீது விசாரணை தொடங்கியுள்ளது.
அரசு ஊழியர் என்பதால், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஊதியக் குறைப்பு, மாற்று பணி அல்லது பணிநீக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.