பாகுபலி தி எபிக் விமர்சனம் - இரண்டு பாகுபலிகள் ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்கும்?
BBC Tamil November 01, 2025 01:48 PM
FB/Baahubali

'பாகுபலி - தி எபிக்' (Baahubali – The Epic) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2015-இல் பரபரப்பை ஏற்படுத்தி, 2017-இல் பாகம்-2 ஆக வந்த இரண்டு திரைப்படங்களையும் சேர்த்து, ஒரே படமாக மீண்டும் வெளியிட்டுள்ளனர். இது எப்படி இருக்கிறது?

கதை அனைவருக்கும் தெரியும். முதல் பாகத்தில், மகேந்திர பாகுபலி, மகிழ்மதிக்குச் சென்று தாய் தேவசேனாவை விடுவிக்கிறான். அவனது தந்தை அமரேந்திர பாகுபலி பற்றி கட்டப்பா கூறுகிறார்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்த சஸ்பென்ஸை இரண்டு ஆண்டுகள் தாங்கிக் கொண்டுதான் ரசிகர்கள் பாகம்-2 ஐ பார்த்தனர்.

இரண்டாம் பாகத்தில், பாகுபலி - தேவசேனா காதல், சிவகாமி தவறாகப் புரிந்து கொள்வது, பல்வால் தேவனின் சதி, இறுதியாக வில்லனின் அழிவு ஆகியவை இடம்பெற்றன.

இது ஒரு எடிட்டிங் அற்புதம்...

இரண்டு பாகங்களும் எடிட் செய்யப்பட்டு, 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய நீளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இடைவேளை வரை முதல் பாகமும், அதன் பிறகு மீதிக் கதையும் வருகிறது.

இது ஒரு எடிட்டிங் அற்புதம். இரண்டு மணி நேர சினிமா வெட்டப்பட்டிருந்தாலும், சிலிர்ப்பூட்டும் காட்சிகள் எதுவும் விடுபடவில்லை.

முதல் பாகத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் ஒரு பாடல் நீக்கப்பட்டுள்ளது. தமன்னாவின் காதல் கதை பின்னணிக் குரல் (Voice Over) மூலம் வேகமாகக் கடந்து செல்லப்படுகிறது.

சுதீப்பின் காட்சி நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அனைத்தும் சுருக்கப்பட்டுள்ளன. புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவற்றைக் கண்டறிவது சிரமம். சண்டைக் காட்சிகள் துல்லியமாக எடிட் செய்யப்பட்டுள்ளன.

youtube/Screenshot பெரிய திரையில் மீண்டும் மகிழ்மதி

உணர்ச்சிகளை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் காட்சிகள் அப்படியே உள்ளன. பல்வால் தேவனின் மகனின் தலையை வெட்டும் காட்சி, தேவசேனாவை அவமதித்தவனின் தலையை வெட்டும் காட்சி, காலகேயர்களுடனான போர், சிவகாமி, கட்டப்பாவின் கிளைமாக்ஸ் காட்சிகள் – இவற்றையெல்லாம் பார்க்கும்போது திரையரங்கமே பத்து ஆண்டுகளுக்கு முன்பு குலுங்கியது போலக் குலுங்குவது விசேஷம்.

இந்த பத்து ஆண்டுகளில் சினிமா வெகுவாக மாறிவிட்டது. பாகுபலியை விடச் சிறந்த கிராபிக்ஸ்களை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், அந்தக் கால தொழில்நுட்பத்துடன் ராஜமௌலி உருவாக்கிய மகிழ்மதி இன்றும் வியக்க வைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் பார்க்கும்போது ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது.

FB/prabhas திரையரங்க அனுபவம்

வீட்டில் டிவியில் பார்ப்பது வேறு. இரண்டு பாகங்களையும் சேர்த்து திரையரங்கில் பார்க்கும் அனுபவம் வேறு. இருப்பினும், இடைவேளையோடு சேர்த்து நான்கு மணி நேரம் ஓடுகிறது.

இன்னும் ஒரு அரை மணி நேரம் குறைத்திருக்கலாம். ஆனால், பாடல்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளை நீக்கும் அபாயம் இருப்பதால், அந்த வேலை செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

'பாகுபலி பாகம்-3' அனிமேஷன் வடிவில் வரவுள்ளது. அதன் டீஸர் இடைவேளையில் காண்பிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கதைகளுடன் புராணக் கதைகளும் கலக்கப்பட்டு இரண்டு உலகங்களின் கதையாக அது வரவுள்ளது.

மகாராஜா பாகுபலி ஒரு தெய்வீக வடிவமாக மாறினால், மக்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

FB/Arka media அதன் சுகமே தனிதான்...

எத்தனை வெப்சீரிஸை பார்த்தாலும், பாகுபலி கொடுக்கும் உணர்வு தனி தான். திரையரங்குகள் நிரம்பி வழிவது இதற்குச் சான்று.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேகத்தில் பார்க்கும்போது பல விஷயங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு செந்தில் குமாரின் ஒளிப்பதிவும், கீரவாணியின் இசையும் ஹாலிவுட் தரத்தில் உள்ளன என்பது தற்போது தெரிகிறது.

youtube/screenshot இடைவேளை எப்படி?

இறுதியாக, 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற கேள்விக்கு ஒரு வேடிக்கையான கேப்ஷனுடன் இடைவேளை அளித்துள்ளார் ராஜமௌலி. அது என்ன என்பதைத் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும்.

பிளஸ் பாயிண்ட்: துல்லியமான எடிட்டிங்

மைனஸ் பாயிண்ட்: 3 மணி நேரம் 40 நிமிட நீளம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.