நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெரியபாளையம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெள்ளபாண்டி (27), குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி சுதாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, சுதா தாய்மாமனார் வீட்டான மேலப்பாட்டம், கொம்மந்தனூருக்கு சென்று தங்கியிருந்தார்.இதையடுத்து, கோபமடைந்த வெள்ளபாண்டி, மனைவியின் தம்பி பெருமாளை (21), வெல்டிங் தொழிலாளியை தொடர்பு கொண்டு பேச முயன்றார்.

ஆனால், பேச்சுவார்த்தை கடுமையான தகராறாக மாறி, இருவருக்கும் இடையே மோசமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளபாண்டி தனது நண்பர் மதுபாலன் உடன் சேர்ந்து, பெருமாளை திட்டமிட்டு சிக்கவைத்து, லுங்கியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னர் அவர்கள், பெருமாளின் உடலை சுமார் 400 அடி ஆழமுள்ள கல்வெட்டான் குழியில் வீசி மறைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்தனர்.
தீவிர விசாரணையின் பின்னர், வெள்ளபாண்டி மற்றும் மதுபாலன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.