 
             
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கரூர் நிகழ்வு, அடுத்தகட்ட பிரசார உத்தி குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, "கரூரில் 41 பேர் உயிரிழந்தது மீள முடியாத சோகம்; காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளே இதற்குக் காரணம்" என்று குற்றம் சாட்டினார். அமைதியான கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது ஏன் என மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்தகட்ட பிரசாரத்திற்குப் பொதுவான விதிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், வரைமுறைகள் வந்த பிறகு பிரசாரம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி குறித்துக் கேட்டபோது, "ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நிர்வாக குழுவின் முடிவுகள் அனைத்தும் கட்சியின் தலைவர் விஜய்யிடம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva