Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?
Vikatan October 31, 2025 03:48 PM

Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.  

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே இல்லை.

கொழுப்பில் பலவிதங்கள் உள்ளன. நம் சருமத்துக்குக் கீழே, அதாவது கழுத்து, இடுப்பு, மார்பு என உடல் முழுவதும் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புக்கு 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( subcutaneous fat ) என்று பெயர். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  இதுதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்புத் திசுக்களுக்கும், கொலஸ்ட்ரால் எனப்படுகிற கொழுப்புச்சத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

கொலஸ்ட்ரால் என்பது நம் கல்லீரலில் இயற்கையாக உருவாகக்கூடியது. இது ஒருவருக்கு 100 கிராம் ரத்தத்தில் 200 முதல் 250 மில்லிகிராம் அளவுதான் இருக்க வேண்டும். இந்தக் கொழுப்புச்சத்தை உருவாக்குவதே கல்லீரல்தான்.

இது நம் உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. நம் மூளையும் நரம்புகளும் சரியாக இயங்க உதவுகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கிறது.

கொலஸ்ட்ரால் டேட்டா

எனவே, பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்ற எண்ணமே தவறு. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது பரம்பரைத் தன்மை. ஒருவரின் மரபணுக்கள், கல்லீரலின் செயல்பாடு, அதன் உற்பத்தித் திறன் போன்றவற்றைப் பொறுத்தது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு 80 சதவிகிதம் இதுதான் காரணம்.

மீதி 20 சதவிகிதம் என்பது ஒருவரது உணவுப்பழக்கத்தினால் வருவது.  பொதுவாக சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் கிடையாது. அசைவ உணவுகளில்தான் அது அதிகம். அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடும்போது அளவுக்கதிகமாக கொலஸ்ட்ரால் சேர்கிறது. எனவே, ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு எப்படி இருக்கிறது என்பதை தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான பிரத்யேகப் பரிசோதனைகளின் மூலம்தான் கண்டறிய முடியும்.

குடும்பப் பின்னணியில் கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாத பாதிப்பு ரிஸ்க் உள்ளவர்களும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையோடு கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து பார்த்து அதன் அளவைத் தெரிந்துகொள்ளலாம். அதிகமிருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.