ஓராண்டாக காணாமல் போனதாக தேடி வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை மாவட்டம் காரமடை நகராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலர் மற்றும் இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டான்டில் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஓராண்டாக காணாமல் போன நிலையில், அது குறித்து அவரது குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில், “தனது அண்ணனை காணவில்லை எனது அண்ணியுடன் நீ தவறான முறையில் தொடர்பு வைத்துள்ளாய், இதனால் என் அண்ணன் அலாவுதீன் காணாமல் போய்விட்டார். உன்னை தீர்த்து கட்டாமல் விட மாட்டேன்” என அலாவுதீன் தம்பி ஹாரீஸ் சிறுமுகை சாலையில் உள்ள ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது
இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஹாரீஸ் மற்றும் ஹக்கீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கொலை சம்பவம் ஓராண்டாற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணாமல் போன அலாவுதீன் மனைவிக்கும் ஹக்கீம் என்பவருக்கும் தொடர் என்பதால் ஹக்கீம் தான் ஒரு வேளை அலாவுதீனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்பட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹக்கீம் கொடுத்த தகவலின் பேரில் அலாவுதீன் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்தது. அதனை விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளதாக அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் காரமடை நகராட்சி மூணாவது வார்டு கவுன்சிலர் அவரது மகன்களுடன் சேர்ந்து அலாவதீனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அலாவுதீன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும் போது அங்கு செல்போன் கடை வைத்து நடத்தி வந்த காரமடை நகராட்சி திமுக 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் சரண்குமார் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது

இதனால் இருவரும் சேர்ந்து பழகி வந்ததுடன் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த கதை தொடர்ந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த கள்ளத்தொடர்பு சரண்குமாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இவரது மனைவி கோபித்து கொண்டு தனது அம்மாவீடு உள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அலாவுதீனை தீர்த்து கட்ட நினைத்து நைசாக பேசி அலாவுதினை வரவழைத்த கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எடுத்து சென்று மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதர் குப்பைகளை கொட்டும் இடத்தில் வைத்து தீயிட்டு எரித்து விட்டு தங்களது இயல்பான வாழ்க்கையை நடத்தியுள்ளனர். மேலும் கர்நாடகாவில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்து சரண்குமார் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது காரமடை நகர் மன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் எரிக்கப்பட்ட அலாவுதீன் உடல் பாக எலும்புகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். கள்ளத்தொடர்பு காரணமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.