வெற்றியின் பின்னால் பழைய சர்ச்சை! ஜெமிமாவை மத ரீதியாகக் கிண்டல் செய்தது ஏன்? கிளப் வளாகத்தில் மதமாற்றம்: அவரது தந்தை மீதான குற்றச்சாட்டு! சமூக ஊடகங்களில் விவாதம்.!!
SeithiSolai Tamil November 03, 2025 08:48 AM

நவிமும்பையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 30, 2025) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 127 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றி நாயகியாக உருவெடுத்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். போட்டிக்குப் பிறகுப் பேசிய அவர், தனது வெற்றிக்குக் கடவுளான இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி தெரிவித்து, பைபிளில் இருந்து ஒரு வசனத்தையும் மேற்கோள் காட்டினார்.

இது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. ஒருபுறம் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைப் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர், ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ், கடந்த 2024ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ‘கார் ஜிம்கானா’ (Khar Gymkhana) கிளப் வளாகத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த பழைய சர்ச்சையை மீண்டும் கிளப்பி, மத ரீதியாகக் கிண்டல் செய்தனர்.


கடந்த 2024ஆம் ஆண்டில், ஜெமிமாவின் தந்தை இவான், ஜிம்கானா கிளப் விதிகளை மீறி மத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எழுந்த புகாரால், ஜெமிமாவின் கௌரவ உறுப்பினர் பதவி திரும்பப் பெறப்பட்டது. இது அவரது மத நம்பிக்கையின் பேரில் விமர்சனத்தைத் தூண்டியது.

அந்தச் சமயத்தில், தனது மகள் பெற்றிருந்த உறுப்பினர் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், அங்கு மதமாற்றக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை, மாறாகத் திறந்த பிரார்த்தனைக் கூட்டங்களே நடத்தப்பட்டன என்றும் இவான் மறுப்புத் தெரிவித்து விளக்கம் அளித்தார்.

ஆனாலும், ஜெமிமா இந்தப் போட்டியில் சதமடிப்பதற்கு அதிக பந்துகளை வீணடித்தார் என்றும், “நான் சதமடிக்க ஆடவில்லை” என்று அவர் அளித்த விளக்கமும் கிண்டலுக்கு உள்ளானது. தனது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் குடும்பத்தின் பழைய சர்ச்சை ஆகிய காரணங்களால், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது மிகப் பெரிய வெற்றிச் சாதனைக்கு மத்தியிலும் சமூக ஊடகங்களில் மத ரீதியான கடுமையான விமர்சனத்தையும், கிண்டலையும் எதிர்கொண்டார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.