பெங்களூருவில் நடந்த துயர சம்பவத்தில், சிக்னலில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்களை மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சாந்திநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எச். சந்திப்பில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது திடீரென வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்திற்குப் பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இடத்தை விட்டு தப்பிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்தபோது, ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லையென ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸை தள்ளி கவிழ்த்தனர். போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சாட்சி அளித்தவர்கள் கூறுகையில், “ஆம்புலன்ஸ் மிகுந்த வேகத்தில் வந்தது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பல வாகனங்களை மோதியது. ஒரு இருசக்கர வாகனத்தை சில மீட்டர்கள் இழுத்துச் சென்று, சிக்னல் கம்பத்தில் மோதிய பின் தான் நின்றது” என தெரிவித்தனர்.
போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை தொடங்கியுள்ளனர். ஆம்புலன்ஸ் ஏன் வேகமாக சென்றது, தொழில்நுட்ப கோளாறா அல்லது ஓட்டுநரின் அலட்சியமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.