BBC கூட்ட நெரிசல் நிகழ்ந்த தனியார் கோவிலை ஹரிமுகுந்த பண்டா என்பவர் கட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பலாசா-காசிபுக்கா என்கிற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.
மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவிலில் அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூடியதே கூட்ட நெரிசலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த கோவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அதைப்பற்றி எந்த தகவலும் அரசிடம் இல்லை இன்றும் ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி தெரிவித்துள்ளார்.
BBC கூட்ட நெரிசல் ஏற்பட்ட கோவிலின் வெளிப்புற தோற்றம் கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
"திருப்பதி கோவிலில் சரிவர தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் இந்தக் கோவிலைக் கட்டினோம்," என அதன் நிர்வாகி ஹரிமுகுந்த பண்டா முன்னர் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். இந்தக் கோவில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்குச் சென்றபோது கடவுள் தரிசனம் சரிவர கிடைக்கவில்லை என்பதால் தான் தங்களின் விவசாய நிலத்தில் இந்தக் கோவிலைக் கட்டியதாகக் கூறுகிறார் ஹரிமுகுந்த பண்டா.
"நாங்கள் பல மணி நேரம் திருப்பதி கோவிலில் காத்திருந்தோம். ஆனால் நாங்கள் உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் உடனடியாக வெளியே தள்ளப்பட்டோம். சரியான தரிசனம் கிடைக்கவில்லை. அனைவரையும் வேகமாக விரட்டினால் எதைப் பார்க்க முடியும்?" என அவர் தெரிவித்தார்.
BBC ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில்
தரிசனம் சரியாக கிடைக்கவில்லை என்பதற்காக தனியாக கோவில் கட்ட வேண்டுமா என்கிற கேள்வியை அவரிடம் பிபிசி முன்வைத்தது.
அதற்குப் பதிலளித்த அவர், "நான் மாதம் ஒருமுறை எனத் தொடங்கி வருடம் ஒருமுறையாவது திருப்பதிக்குச் சென்று வருவேன். அப்போதெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் பத்து ஆண்டுகள் கழித்து இப்போது தான் சென்றோம். இப்போது எல்லாம் மாறிவிட்டது." எனத் தெரிவித்தார்.
5 மணி நேரம் கோவில் வரிசையில் காத்திருந்தும் முறையான தரிசனம் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், "தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டை பெற்றுவிட்டு காலை 9 மணிக்கு வரிசையில் நின்றோம். ஆனால் மதியம் 2 மணி வரை உள்ளே செல்ல முடியவில்லை. ஆனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு என் அம்மாவிடம் கூறினேன். அவர்கள் தான் நமது நிலத்திலே கோவில் கட்டிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்." என்றார்.
BBC திருப்பதி கோவிலில் சரிவர தரிசனம் கிடைக்காததால் தான் இந்த கோவிலைக் கட்டியதாக கூறுகிறார் பண்டா. "அம்மா வழங்கிய நிலம்"
இந்தக் கோவில் நிலத்திற்கு சொந்தம் கொண்டாட எங்கள் குழந்தைகளுக்கும் உரிமை இல்லை எனக் கூறும் ஹரிமுகுந்த பண்டா, "கோவில் கட்டுவதற்கான நிலத்தை தன்னுடைய அம்மா தான் வழங்கினார். எங்களின் சொந்த நிலத்தில் சொந்த பணத்தில் கட்டினோம். இதற்காக திருப்பதியிலிருந்து 9 அடி உயர சிலை வாங்கி வந்தோம். அங்கிருந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சிலைகளும் வாங்கி வந்தோம். வேத பண்டிதர்களின் அறிவுரைப்படி ஒற்றைக் கல்லில் இந்தச் சிலையை செய்தோம்." என்று தெரிவித்தார்.
விவசாய வருமானத்தில் இருந்தே இந்தக் கோவில் கட்டப்பட்டதாகக் கூறும் பண்டா, இதற்காக யாரிடமும் நன்கொடையோ பங்களிப்போ பெறப்படவில்லை என்றார்.
தன்னைப் போல திருப்பதிக்கு தரிசனம் சென்ற பலரும் இதே போன்ற சூழலைச் சந்திப்பதாகக் கூறுகிறார் பண்டா. "மக்கள் எப்படிச் சென்று தரிசனம் காண்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. அங்கு சென்றால் எம்பி. எம்எல்ஏ அல்லது அமைச்சரிடமிருந்து கடிதம் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். நான் எங்கே போய் பெற முடியும்?" என்றும் அவர் தெரிவித்தார்.
BBC ஒற்றைக் கல்லில் உருவாக்கப்பட்ட சிலை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் பற்றி என்ன சொல்கிறார்?
இந்த ஊரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் தான் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆயின.
இந்தக் கோவிலில் பிரதான சிலை திருமலை கோவிலில் உள்ளதைப் போல அமைந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்தும் பல ஒற்றைக் கல் சிலைகள் கொண்டு வரப்பட்டன. கோவில் சுவர்களில் ராமாயணம், பகவத் கீதை மற்றும் மகாபாரதம் போன்றவை சிலை வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக தங்கும் விடுதிகளும் கல்யாண மண்டபமும் இங்கு கட்டப்பட்டுள்ளது.
"அனைவரும் பார்த்து, ரசித்து, வழிபடவே கோவிலைக் கட்டினோம்," என்கிறார் பண்டா.
டெல்லியில் மருத்துவம் படித்த தன்னுடைய மகன் தனக்குப் பிறகு இந்தக் கோவில் பொறுப்புகளை எடுத்துக் கொள்வார் எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது இவ்வாறு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
"வழக்கமாக 2,000 பேர் கோவிலுக்கு வருவார்கள். இவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியாததால் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை." என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு