2 நிமிடத்தில் இதய அடைப்புகளை தெரிந்துகொள்ள புதிய வசதி! ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
Top Tamil News November 02, 2025 06:48 PM

எளிய முறையில் இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளாக முழு உடல் பரிசோதனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தினசரி சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் முழு உடல் பரிசோதனையை செய்து வருகின்றனர். 1000ரூபாய் முதல் 4ஆயிரம் ரூபாய் வரை என 4 நிலையான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பு இருதய பிரச்சினை என்பது அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில்,  இசிஜி, ரத்த பரிசோதனை, எக்கோ, ட்ரெட்மில் உள்ளிட்ட பல பரிசோதனைகள் மூலம் இருதய பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்கிவருகிறது. 

5 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரும் பிரச்சினையாக இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும், மது பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இல்லாத நபர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் பருமன், ஜெனிடிக் சார்ந்த இருதய பாதிப்புகள், இணை நோய் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் உள்ளவர்கள், தூக்கமின்மையால் உள்ளவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய பல பரிசோதனை இருந்தாலும், புதிய பரிசோதனை திட்டத்தை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CT Calcium Scoring எனும் பரிசோதனை அறிமுகம் செய்யப்பட்டதால் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. 


இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துள்ளியமாக தெரிவிக்க உதவுகிறது. இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிநவீன சிடி ஸ்கேன் பரிசோதனை கருவி உள்ளது. இதன் மூலம், ஊசிகளோ, மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கிறது. இதற்காக 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் CT Calcium scoring பரிசோதனை செய்ய குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 ரூபாய்க்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் முழு உடல் பரிசோதனை செய்யும் போது இந்த பரிசோதனையும் செய்துகொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இருதய பாதிப்பு குறித்து விழிப்புணர்வு எந்த அளவிற்கு தேவையோ அதே அளவிற்கு பரிசோதனைகளும் முக்கியமாக உள்ளது. இது போன்ற திட்டங்கள் மக்கள் நலன்சார்ந்து இருப்பதால் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.