“அதிமுகவில் செங்கோட்டையன் ராஜாவா இருந்தாரு, இப்ப அங்க கூஜா தூக்க போய்ட்டாரு”- திண்டுக்கல் சீனிவாசன்
Top Tamil News November 03, 2025 01:48 AM

அந்த 4 பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “சசிகலா, செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக சட்டத்தின் படியும், பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவர்கள் அவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, சசிகலா போல நானும் சொல்கிறேன் "Wait and See". இவர்களின் வாழ்க்கை 3 மாதங்களில் என்ன ஆகப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி பழனிச்சாமி வசம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர், சசிகலா, டிடிவி உள்ளிட்டவரிடம் ஒரு எம்எல்ஏவாது உள்ளார்களா?, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு துரோகிகள் தான் காரணம், சசிகலா, டி.டி.வி போன்ற துரோகிகளால் சட்டமன்றத்தில் தோல்வி அடைந்தோம், அதிமுகவை பொறுத்த அளவிற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி வழியில் செயல்பட்டு வருகிறோம்.

திமுக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 5000 ரூபாய் கொள்ளை அடிக்கிறது, ஆகவே மக்களின் அதிருப்தி கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ளது. மெகா கூட்டணி அமைத்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற முடியாது. புரட்சி செய்தாலும் பணம் கொடுத்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறாதே இந்த ஆட்சி ஒழிய வேண்டுமென மக்கள் நினைத்து விட்டார்கள். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற துரோகிகளை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம், துரோகிகளை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என வெட்டு ஒன்று, துண்டு 2 எனும் முடிவில் இருக்கிறோம், அதிமுகவில் துரோகிகள் நீக்கப்படுவதால் நாங்கள் பலவீனமாக இல்லை. பசும்பொன்னில் எடப்பாடியுடன் செங்கோட்டையன் வந்திருக்க வேண்டும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் தேவராக உள்ள போது கொங்கு வெள்ளாள கவுண்டராக சேர்ந்த செங்கோட்டையனை அழைத்துச் சென்று உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதிமுகவில் செங்கோட்டையன் ராஜாவாக இருந்தார், ஆனால், துரோகிகளிடம் சேர்ந்து செங்கோட்டையன் கூஜா தூக்கச் சென்றுள்ளார்.

பதவியில் இருந்தால் மட்டுமே மரியாதை, பதவியை விட்டு செல்கிறேன் என்றால் யாரும் கவலைப்பட மாட்டார்கள். அண்ணே எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என காத்திருப்பார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மிகப்பெரிய சக்தி வந்துள்ளது என நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் பிரிந்து சென்றவர்களுக்கு எந்த ஒரு சக்தியும் இல்லாமல் அந்து போய் கிடக்கிறார்கள். ஓபிஎஸ் சும்மா கிடந்தவர்களுக்கு மாவட்ட செயலாளரும் தெருவில் கிடந்தவர்களுக்கு ஒன்றிய செயலாளர் என பதவிகளை வழங்கி வருகிறார். 2021 ஆம் ஆண்டில் 2 லட்சம் வாக்கு வித்தியாசம் ஆட்சியில் இழந்தோம். அதிமுகவில் வெட்டி ஆபீஸராக உள்ளவர்கள் மட்டுமே செங்கோட்டையை நோக்கி செல்வார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற செங்கோட்டையன் எந்த கட்சியில் போய் சேர்ந்தால் எங்களுக்கு என்ன? செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கியது நூற்றுக்கு நூறு சரி, கட்சி என்றால் ஒரு டிஸிபிலின் வேண்டும், அந்த 4 பேரும் ஒன்று சேர்ந்ததால் தென் மாவட்ட வாக்குகள் பாதிக்காது” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.