சட்ட விரோத குவாரி: அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்!? - என்ன நடந்தது?
Vikatan November 03, 2025 01:48 PM

அறப்போர் இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் சட்டவிரோத கல்குவாரியால் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் சிலர் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருக்கிறது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பக்கப் பதிவில், ``நெல்லையில் சட்ட விரோதமாக கல் குவாரிகள் நடத்தி இயற்கை வளங்களை திருடி வருபவர்கள் குறித்து அறப்போர் இயக்கம் பல வருடங்களாக புகார் அளித்து வருகிறது.

இன்று திருநெல்வேலியில் இந்த சட்ட விரோத திருட்டு குவாரிகளால் அங்கே வசிக்கும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அறப்போர் இயக்கம் முன்னெடுத்த கூட்டத்தில் புகுந்த குண்டர்கள்

அந்த கூட்டத்தில் மக்கள் கருத்தை கேட்டுக் கொண்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் PUCL சுரேஷ் அவர்கள் மீது குவாரி ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அவர் அறப்போர் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும் கூட.

உங்கள் வன்முறை அறப்போர் இயக்கத்தின் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தது.

மற்றொரு பதிவில், ``சட்ட விரோத குவாரிகளுக்கு எதிரான அறப்போர் தொடரும். திருநெல்வேலியில் சட்டவிரோத திருட்டு கல் குவாரிகளால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் நிகழ்வு இன்று நடந்தது.

இதில் கலாட்டா செய்ய வேண்டும் என்பதற்காகவே திருட்டு குவாரி ரவுடிகள் சிலர் வந்து தகராறு செய்தார்கள். நாற்காலிகளை தூக்கி எறிந்து கலாட்டா செய்தார்கள்.

ஆனால் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் உருட்டல்கள் வந்தாலும் அறப்போர் தொடரும். இது போன்ற தடைகள் நம் வேலைகளை ஒருபொழுதும் நிறுத்தாது.

இன்னும் வேகமாக செயல்பட்டு சட்டவிரோத திருட்டு கல் குவாரி ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிக்கொண்டு வருவோம்.

இது போன்ற சட்ட விரோத திருட்டு குவாரிகளை ஆதரிப்பதை திமுக அரசு எப்பொழுது நிறுத்தப் போகிறது? திருட்டு குவாரிகளின் திருட்டை எப்பொழுது தடுக்க போகிறது?

திருட்டு குவாரி முதலாளிகளை விட மக்கள் நலன் முக்கியம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் எப்பொழுது உணர போகிறார்?" என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பு: சட்ட விரோதமாக திருட்டு குவாரி நடத்தி இயற்கை வளங்களை திருடுபவர்கள் திருடர்கள் தான்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நில அபகரிப்பு புகாரளித்த அறப்போர் இயக்கம்... மறுக்கும் தனியார் நிறுவனம்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.