செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, “எல்லோரும் ஒரே கருத்தில் இருக்க முடியாது, ஆனால் மனவருத்தம் இருந்தால் அதை பொதுவெளியில் வெளிப்படுத்தக் கூடாது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ அறிவுறுத்தினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் டெல்டா மாவட்டத்தைப் பற்றிப் பெருமையாகக் கூறி வருகிறார். ஆனால் அந்தப் பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனிக்காமல் விட்டுவிட்டார். நெல் கொள்முதல் சரியாக நடந்திருக்க வேண்டியது அவசியம். எங்கள் பொதுச் செயலாளர் விவசாயி என்பதால் பிரச்சினையை நன்கு புரிந்து, நெல் கொள்முதலை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கச் செய்துள்ளார்” என்றார்.
அவர் மேலும், “அதிமுகவில் கருத்து வேறுபாடு இயல்பானது. ஆனால் அதைக் கொண்டு கட்சிக்கு எதிராக செயல்படக் கூடாது. செங்கோட்டையனே ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஒரே தலைவராக ஆதரித்தவர். இப்போது அதே தலைவருக்கு எதிராகச் செல்வது சரியல்ல. தலைமைக்கு எதிரானவர்களுடன் கைகோர்ப்பது கட்சியை பாதிக்கும்,” எனவும் கூறினார்.
“நான் மாவட்டச் செயலாளராக இருப்பதால், எனது கீழ் உள்ள நிர்வாகிகள் ஆலோசனையுடன் செயல்படுகிறார்கள். அதுபோலவே, செங்கோட்டையனும் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலை மதிக்க வேண்டும். தலைவரிடம் குறைகளை நேரடியாகச் சொல்லலாம்; ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது. கட்சித் துறையின் ஒழுங்கை காக்கும் விதமாக தான் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்கிறார்,” என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை மறந்து விடுகிறார்கள். கூட்டணியை நம்பியே நிற்கும் கட்சியாக மாறிவிட்டனர். ஆனால் அதிமுக எப்போதும் தனித்துவமான சக்தி. மக்கள் திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்,” எனச் செல்லூர் ராஜூ கூறினார்.