இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொகைன் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு துறை (DRI) அதிகாரிகள் சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு பெண் பயணியின் பயணப்பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றைத் திறந்து பார்த்தபோது, காபி பொடி பாக்கெட்டுகளுக்குள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.7 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.47 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப் பொருளை கடத்தி வந்த பெண்ணையும், அதை பெற வந்தவரையும் சேர்த்து மொத்தம் 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்தி போதைப் பொருளை கடத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிக்க உணவுப் பொருட்கள் மற்றும் மசாலா பாக்கெட்டுகளில் போதைப் பொருளை மறைத்து அனுப்புவது போன்ற புதிய யுக்திகளை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.