அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில், இ.பி.எஸ்.ஸின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்தே, அவர் கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) அவரை நீக்கினார்.
இந்த நீக்க நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, செங்கோட்டையன் எழுதியுள்ள கடிதத்தில், “இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. இல்லை” என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க தங்களுக்கு அவகாசம் தேவை என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையனின் இந்த திடீர் நகர்வு, இரட்டை இலைச் சின்னம் மற்றும் அ.தி.மு.க. தலைமைப் பதவி தொடர்பாக இ.பி.எஸ். அணிக்கு புதிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.