விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரிஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ரியோ ராஜ். அதன்பின் சன் மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக வேலை செய்து வந்தார். அதன்பின் மீண்டும் விஜய் டிவிக்கு வந்த ரியோ ராஜ் ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்கிற படத்திலும் நடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இவரின் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தற்போது இவரின் ஆண்பாவம் பொல்லாதது படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தில் ஜோ படத்தில் நடித்த மாளவிகா மனோஜ் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.
இந்த கால 2கே கிட்ஸ்களின் காதல், திருமணம், விவாகரத்து ஆகியவற்றை பற்றி படத்தில் பேசி இருக்கிறார்கள். வெளியானது முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தது. எனவே ஜோ-வுக்கு பின் இந்த படமும் ரியோ ராஜுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. கண்டிப்பாக இந்த வார இறுதி வரை ஆண் பாவம் பொல்லாதது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.