சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பா.ம.க. எம்.எல்.ஏ.வான அருளைக் குறிவைத்து, அவரது கார் மீது ஒரு கும்பல் பயங்கரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய எம்.எல்.ஏ. அருளின் காரை திடீரென்று வழிமறித்த அந்தக் கும்பல், கட்டைகள் மற்றும் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் எம்.எல்.ஏ. அருளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், கட்சியிலேயே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல், தன்னைக் குறி வைத்துக் கொலை செய்ய நடந்த முயற்சி என்று எம்.எல்.ஏ. அருள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.